அதனாலயே அவர் இந்தளவுக்கு விளையாடி வருகிறார் - இந்திய வீரரை பாராட்டிய ஜெயசூர்யா
|ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜெய்ஸ்வால் எந்தளவுக்கு கடினமாக உழைக்கிறார் என்பதை கேள்விப்பட்டு ஈர்க்கப்பட்டதாக சனத் ஜெயசூர்யா பாராட்டியுள்ளார்.
கொழும்பு,
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் நட்சத்திர அதிரடி பேட்ஸ்மேனான ஜெய்ஸ்வால் வருங்கால நட்சத்திரமாக அறியப்படுகிறார். ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக சிறப்பாக விளையாடியதன் மூலம் இந்திய அணிக்கு தேர்வான அவர் தற்சமயம் இந்திய அணியின் மேட்ச் வின்னராக செயல்பட்டு வருகிறார்.
இந்தியாவுக்காக வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அறிமுகமானார். அந்த வாய்ப்பில் தனது அறிமுக போட்டியிலேயே சதமடித்து சாதனை படைத்த அவர் இந்தியாவின் வெற்றிக்கு உதவினார். அத்துடன் சீனாவில் நடைபெற்ற 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நாக் அவுட் போட்டியில் சதமடித்த அவர் இந்தியா தங்கப் பதக்கம் வெல்வதற்கு உதவினார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அபாரமாக விளையாடிய ஜெய்ஸ்வால் 700+ ரன்கள் குவித்தார். அதனால் தொடர்நாயகன் விருது வென்ற அவர் இந்தியா 4 - 1 (5 போட்டிகள்) என்ற கணக்கில் தொடரை வெல்ல உதவினார்.
இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜெய்ஸ்வால் எந்தளவுக்கு கடினமாக உழைக்கிறார் என்பதை கேள்விப்பட்டு ஈர்க்கப்பட்டதாக இலங்கை முன்னாள் வீரர் சனத் ஜெயசூர்யா பாராட்டியுள்ளார். அந்த கடின உழைப்பாலேயே ஜெய்ஸ்வால் இந்தளவுக்கு அசத்துவதாகவும் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.
இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:- "ஜெய்ஸ்வால் இந்தியாவிலிருந்து வந்துள்ள மற்றொரு சிறந்த திறமையான வீரர். நன்றாக விளையாட வேண்டும் என்ற ஆர்வமும் விருப்பமும் கொண்டுள்ள அவர் அதற்காக மிகவும் கடினமாக உழைத்து வருகிறார். சில தியாகங்களை செய்துள்ள அவர் அர்ப்பணிப்புள்ள குழந்தை. அதனாலயே அவர் இந்தளவுக்கு நன்றாக விளையாடி வருகிறார்.
அவரது பணி நெறிமுறைகளை பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அது மிகவும் கவரக்கூடிய வகையில் இருக்கிறது. சமீபத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உயர் செயல்திறன் இயக்குனர் ஜூபின் அவர்களுடன் நாங்கள் பேசும் வாய்ப்பைப் பெற்றோம். அவர் ஜெய்ஸ்வால் எந்தளவுக்கு கடினமான பயிற்சிகளை செய்கிறார் என்பதை எங்களிடம் தெரிவித்தார்" என்று கூறினார்.