தற்போது நாங்கள் இந்த நிலையில் இருப்பதற்கு முக்கிய காரணம் அதுதான் - கே.எல்.ராகுல் பேட்டி
|லக்னோ தரப்பில் அதிகபட்சமாக நிகோலஸ் பூரன் 61 ரன், அர்ஷத் கான் 33 ரன் எடுத்தனர்.
டெல்லி,
ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து 208 ரன்கள் குவித்தது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக போரெல் 58 ரன், ஸ்டப்ஸ் 57 ரன் எடுத்தனர்.
லக்னோ தரப்பில் நவீன் உல் ஹக் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 209 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய லக்னோ அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 189 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 19 ரன் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.
லக்னோ தரப்பில் அதிகபட்சமாக நிகோலஸ் பூரன் 61 ரன், அர்ஷத் கான் 33 ரன் எடுத்தனர். டெல்லி தரப்பில் இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த ஆட்டத்தில் இஷாந்த் சர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் இந்த போட்டியில் தோல்வி அடைந்த பின்னர் லக்னோ கேப்டன் ராகுல் அளித்த பேட்டியில் கூறியதாவது, இந்த போட்டியில் 40 ஓவர்களிலும் ஆடுகளம் ஒரே மாதிரியாகத்தான் இருந்தது என்று நினைக்கிறேன். நாங்கள் முதல் ஓவரிலேயே ஜேக் பிரேசரை வெளியேற்றினோம். ஆனால் அதை நாங்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
அபிஷேக் மற்றும் ஹோப் இருவரும் சிறப்பாக விளையாடினார்கள். பின் இறுதியில் நாங்கள் நன்றாகவே செயல்பட்டோம். 200 ரன்கள் என்பது துரத்தக்கூடியதாகவே இருந்தது. நாங்கள் இந்த ரன்களை எடுத்து வெற்றி பெற்றிருக்க வேண்டும.
பவர் பிளேவில் நாங்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து கொண்டே இருக்கிறோம். இதன் காரணமாக எங்களால் பூரன் மற்றும் ஸ்டோய்னிஸ் இடம் இருந்து சிறந்ததை பெற முடியவில்லை. தற்போது நாங்கள் இந்த நிலையில் இருப்பதற்கு அதுதான் முக்கிய காரணம். இவ்வாறு அவர் கூறினார்.