< Back
கிரிக்கெட்
அதிரடியாக விளையாட எனக்கு அதிக தன்னம்பிக்கையை அதுதான் கொடுக்கிறது - ஆட்டநாயகன் அபிஷேக் சர்மா

image courtesy: twitter/@IPL

கிரிக்கெட்

அதிரடியாக விளையாட எனக்கு அதிக தன்னம்பிக்கையை அதுதான் கொடுக்கிறது - ஆட்டநாயகன் அபிஷேக் சர்மா

தினத்தந்தி
|
28 March 2024 4:50 AM IST

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் வீரர் அபிஷேக் சர்மா ஆட்ட நாயகன் விருது வென்றார்.

ஐதராபாத்,

17-வது ஐ.பி.எல். தொடர் கடந்த 22-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆரம்பமாகி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதன் 8-வது லீக் ஆட்டத்தில் நேற்று முன்னாள் சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.

அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் 20 ஓவர்களில் 277/3 ரன்கள் குவித்து ஐ.பி.எல். வரலாற்றில் அதிக ஸ்கோர் அடித்த அணியாக சாதனை படைத்தது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 62, அபிஷேக் சர்மா 63, ஐடன் மார்க்ரம் 42, ஹென்றிச் கிளாசென் 80 ரன்கள் குவித்தனர்.

இதனையடுத்து 278 ரன்களை துரத்திய மும்பைக்கு ரோகித் சர்மா 26, இசான் கிசான் 34, நமன் திர் 30, திலக் வர்மா 64 ரன்கள் அடித்து அதிரடியாக விளையாடும் முயற்சியில் அவுட்டானார்கள். அதனால் கடைசியில் டிம் டேவிட் அதிரடியாக 42 ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் 246/5 ரன்கள் மட்டுமே எடுத்து மும்பை போராடி தோல்வியை சந்தித்தது.

இந்த வெற்றிக்கு அதிவேகமாக அரை சதம் அடித்த ஐதராபாத் வீரர் என்ற சாதனை படைத்த அபிஷேக் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடியதால் கிடைத்த தன்னம்பிக்கைதான் தம்முடைய அதிரடியான ஆட்டத்திற்கு காரணம் என்று அபிஷேக் சர்மா கூறியுள்ளார்.

இது பற்றி அவர் அளித்த பேட்டியில் பேசியது பின்வருமாறு:- "இதை கடந்த பேட்டியிலும் நான் தெரிவித்தேன். உள்ளூர் போட்டிகள்தான் எங்களுக்கு அதிகமான தன்னம்பிக்கையை கொடுக்கிறது. அதை வைத்து களத்திற்கு சென்று வெளிப்படுத்துங்கள் என்பதே பேட்ஸ்மேன்களுக்கு என்னுடைய மெசேஜாகும். என்னுடைய திட்டம் அட்டாக் செய்வதாக இருந்தது. டிராவிஸ் ஹெட் போன்ற எனக்கு மிகவும் பிடித்த ஒருவருடன் சேர்ந்து பேட்டிங் செய்தது மகிழ்ச்சியாக இருந்தது.

அவரை நான் ரசிக்கிறேன். உன்னுடைய இடத்தில் பந்து வந்தால் அடி என்று அவர் என்னிடம் சொன்னார். எந்த இடமாக இருந்தாலும் கிடைக்கும் வாய்ப்பால் நான் மகிழ்கிறேன். நேற்று இரவு பிரையன் லாராவிடம் பேசியது எனக்கு அதிகமாக உதவியது. வலைப்பயிற்சியில் நான் பேட்டிங்கை விட பவுலிங்கில் அதிகமாக கவனம் செலுத்துகிறேன். எனவே பந்து வீச்சிலும் என்னுடைய சிறந்தவற்றை கொடுக்க முயற்சிக்கிறேன்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்