< Back
கிரிக்கெட்
அந்த வங்காளதேச வீரர் இந்தியாவுக்கு கடும் சவால் அளிப்பார் - பிரக்யான் ஓஜா எச்சரிக்கை
கிரிக்கெட்

அந்த வங்காளதேச வீரர் இந்தியாவுக்கு கடும் சவால் அளிப்பார் - பிரக்யான் ஓஜா எச்சரிக்கை

தினத்தந்தி
|
17 Sept 2024 11:40 AM IST

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு பயிற்சி எடுக்கும் இடமாக வங்காளதேச தொடர் இருக்கும் என ஓஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மும்பை,

இந்தியா - வங்காளதேசம் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 19-ம் தேதி ஆரம்பமாக உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 19-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த தொடருக்கு முன்னதாக பாகிஸ்தானை அதனுடைய சொந்த மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்த்தி வங்காளதேசம் வரலாறு படைத்தது. எனவே அந்த உத்வேகத்துடன் இந்தியாவையும் வீழ்த்துவோம் என்று வங்காளதேச கேப்டன் நஜ்முல் சாண்டோ சவால் விடுத்திருந்தார். குறிப்பாக பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் ஆல் ரவுண்டராக அசத்திய மெஹதி ஹசன் தொடர்நாயகன் விருதை வென்றார். எனவே அவர் இந்தியாவை வீழ்த்த உதவுவார் என்று நம்புவதாக நஜ்முல் சாண்டோ தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஷகிப் அல் ஹசன் போல மெஹதி ஹசன் இந்திய அணிக்கு மிகப்பெரிய சவாலை கொடுப்பார் என்று முன்னாள் வீரர் பிரக்யான் ஓஜா எச்சரித்துள்ளார். எனவே அவரிடம் இந்திய பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் கவனத்துடன் விளையாட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் நவம்பர் மாதம் தொடங்கும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு பயிற்சி எடுக்கும் இடமாக வங்காளதேச தொடர் இருக்கும் என ஓஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "வங்காளதேசம் ஆசிய கண்டத்தைச் சேர்ந்த அணி அவர்களிடம் நல்ல ஸ்பின்னர்கள் இருக்கின்றனர். குறிப்பாக மெஹதி ஹசன் பாகிஸ்தான் தொடரில் தொடர்நாயகன் விருது வென்றார். செயல்படும் விதத்தில் அவர் நல்ல பேட்ஸ்மேன் மற்றும் ஸ்பின்னராக தெரிகிறார். அதே போல ஷகிப் அல் ஹசன் இருப்பதால் இத்தொடர் எளிதாக இருக்காது. குறிப்பாக சுழலுக்கு சாதகமான பிட்ச்சில் அவர்களுக்கு எதிராக இந்தியா விளையாடுவது கொஞ்சம் சவாலாக இருக்கும். அதற்காக வங்காளதேசம் நம்மை வீழ்த்தும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவர்கள் நல்ல போராட்டத்தை கொடுக்கலாம்.

ஏனெனில் பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய அவர்கள் சரியான பாதையில் பயணிக்கின்றனர். மறுபுறம் நமது வீரர்கள் இங்கே விளையாடி ஆஸ்திரேலியா தொடருக்கு தயாராவார்கள். ஆஸ்திரேலியா கடந்த 2 தொடர்களை சொந்த மண்ணில் வெல்லவில்லை என்பது நமக்குத் தெரியும். எனவே இம்முறை அவர்கள் இந்தியாவை வீழ்த்த விரும்புவார்கள். அதனால் வங்காளதேசத்துக்கு எதிரான இத்தொடர் இந்திய அணிக்கு வேகத்தை கொடுக்கும் முக்கிய தொடராக இருக்கும்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்