எனக்கு ஆதரவு கொடுத்த என்னுடைய கேப்டனுக்கு நன்றி - ஷிகர் தவான்
|ஷிகர் தவான் சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இன்று ஓய்வு அறிவித்தார்.
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர இடது கை பேட்ஸ்மேனான ஷிகர் தவான் சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இன்று ஓய்வை அறிவித்துள்ளார். டெல்லியைச் சேர்ந்த அவர் 2010-ம் ஆண்டு இந்தியாவுக்காக அறிமுகமாகி ஆரம்பக் காலங்களில் தடுமாறிக் கொண்டிருந்தார்.
அப்போது அவரை 2013 சாம்பியன்ஸ் டிராபியில் ரோகித் சர்மாவுடன் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி தொடக்க வீரராக களமிறக்கினார். அந்த வாய்ப்பை பிடித்துக்கொண்ட ஷிகர் தவான் தங்க பேட் விருது வென்று 2013 சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வெல்ல உதவினார். அப்போதிலிருந்து ஐசிசி தொடர்களில் அபாரமாக விளையாடிய அவர் 2019 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக காயத்துடன் சதமடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்து வெளியேறினார்.
அவர் காயத்திலிருந்து குணமடைந்த பின் அதிரடியாக விளையாடத் தடுமாறினார். அதன் காரணமாக இந்திய அணியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக கழற்றி விடப்பட்ட அவருக்கு போட்டியாக தற்போது ஜெய்ஸ்வால் போன்ற பல இளம் கிரிக்கெட் வீரர்கள் வந்துள்ளனர். அதனால் தற்போது வருங்காலத்தை கருத்தில் கொண்டு 38 வயதில் ஓய்வு பெறுவதாக தவான் அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு சோகமாக அமைந்தது.
இந்நிலையில் ஆரம்ப காலங்களில் தமக்கு ஆதரவு கொடுத்த தோனிக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-
"எனக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்த என்னுடைய கேப்டன் எம்எஸ் தோனிக்கு நன்றியுடையவனாக இருக்கிறேன். குறிப்பாக 2015 உலகக்கோப்பைக்கு முன் நான் சுமாராக விளையாடி தடுமாறிய கடின காலங்களில் அவர் எனக்கு ஆதரவு கொடுத்தார்" என்று கூறியுள்ளார்.