நன்றி சுனில் கவாஸ்கர் சார்...ஆனால் தோனி என்றால் ஒருவர்தான் - துருவ் ஜூரெல்
|இந்திய அணியின் அடுத்த தோனி என்று சுனில் கவாஸ்கர் பாராட்டியது குறித்து துருவ் ஜூரெல் கருத்து தெரிவித்துள்ளார்.
மும்பை,
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான இளம் வீரர் துருவ் ஜூரெல் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். குறிப்பாக அந்த தொடரின் 3-வது போட்டியில் விக்கெட் கீப்பராக அறிமுகமாகி 46 ரன்கள் அடித்த துருவ் ஜூரெல் 4-வது போட்டியில் இக்கட்டான சூழ்நிலையில் சிறப்பாக பேட்டிங் செய்து இந்தியாவை வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருது வென்றார்.
அதை விட 4-வது போட்டியில் அழுத்தமான சூழ்நிலையில் விழிப்புணர்வுடன் விளையாடிய விதத்தை வைத்து அவர் அடுத்த எம்.எஸ். தோனியாக உருவெடுப்பார் என்று சுனில் கவாஸ்கர் பாராட்டி இருந்தார்.
இந்நிலையில் சுனில் கவாஸ்கரின் இந்த கருத்து குறித்து துருவ் ஜூரெல் பேசுகையில், 'எம்.எஸ். தோனி போன்ற ஜாம்பவானுடன் என்னை ஒப்பிட்டு பாராட்டுவதற்கு நன்றி சுனில் கவாஸ்கர் சார். ஆனால் என்னால் தோனியை போல் சாதனைகளை செய்ய முடியாது. ஏன், யாராலும் இந்திய அணிக்காக தோனி செய்த செயல்களை செய்ய முடியாது. என்ன இருந்தாலும், தோனி என்றால் ஒருவர்தான். என்னை பொறுத்தவரை நானும் துருவ் ஜூரெல்லாகவே இருக்க விரும்புகிறேன். எத்தனை சாதனை செய்தாலும், எது செய்தாலும் துருவ் ஜூரெல்லாகவே செய்ய விரும்புகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.