மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி கடிதம்
|சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற தனக்கு, பிரதமர் மோடி கூறிய வாழ்த்துக்கு மனதார நன்றி தெரிவித்துள்ளார் மிதாலி ராஜ்.
இந்திய பெண்கள் கிரிக்கெட்டின் 'சாதனை சிகரம்' மிதாலிராஜ் கடந்த மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். மகளிருக்கான ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவரான 39 வயதான மிதாலிராஜ் 23 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார். அவர் ஓய்வு பெற்றதும் அவரை பாராட்டி பிரதமர் மோடி கடிதம் எழுதியிருக்கிறார். அந்த கடிதத்தை இப்போது மிதாலி வெளியிட்டுள்ளார்.
அதில் பிரதமர் மோடி, 'சர்வதேச கிரிக்கெட்டில் 20 ஆண்டுக்கு மேலாக மிகச்சிறந்த பங்களிப்பு அளித்து, தேசத்தை பெருமைப்பட வைத்த உங்களுக்கு (மிதாலி) கோடிக்கணக்கான ரசிகர்களுடன் இணைந்து நானும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது நீண்டகால விளையாட்டு வாழ்க்கையில் நிறைய சாதனைகளை படைத்து இருக்கிறீர்கள். உங்களது கேப்டன்ஷிப் திறமை அற்புதமானது. 2017-ம் ஆண்டு உலக கோப்பை இறுதிப்போட்டியில் வெற்றியை நெருங்கி வந்ததை மறந்து விட முடியாது. நெருக்கடியான அந்த தருணத்தை நீங்கள் அமைதியாகவும், பொறுமையாகவும் கையாண்ட விதம் அனைவராலும் பாராட்டப்பட்டது. அடுத்து நீங்கள் எதை செய்தாலும் அது சிறப்பாக அமைய வாழ்த்துகள். கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றாலும் இந்திய விளையாட்டுக்கு தொடர்ந்து ஏதாவது ஒரு வகையில் பங்களிப்பு அளிப்பீர்கள் என்று நம்புகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து மிதாலி கூறுகையில், 'எனக்கு உள்பட பல கோடி மக்களின் முன்னுதாரணமாக திகழும் பிரதமரே என்னை ஊக்கப்படுத்தி வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதி இருப்பது பெருமையாக இருக்கிறது. இந்த கடிதம் வாழ்நாள் பொக்கிஷம். கிரிக்கெட்டுக்கு நான் அளித்த பங்களிப்பு குறித்து அவர் உதிர்த்த பாராட்டு வார்த்தைகள் என்னை திகைப்படைய செய்கிறது.' என்றார்.