இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: 3-வது நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 2வது இன்னிங்சில் 232/2
|தென் ஆப்பிரிக்கா அணியில் லாரா வோல்வார்ட் 93 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்
சென்னை,
இந்தியா-தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முன் தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.அதன்படி, முதல் இன்னிங்சில் இந்திய அணி 6 விக்கெட்டுக்கு 603 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதன்மூலம் மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் அதிகபட்ச ஸ்கோர் எடுத்த அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது.அடுத்து, முதல் இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்கா நேற்று இரண்டாம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 266 ரன்களில் ஆல் அவுட்டானது.இந்தியா சார்பில் ரானா சிறப்பாக பந்துவீசி 8 விக்கெட்டும், தீப்தி சர்மா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதன்மூலம் பாலோ ஆன் பெற்ற தென் ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் சூன் லூஸ் சதமடித்து 109 ரன்னில் அவுட்டானார். லாரா வோல்வார்ட் 93 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். மூன்றாம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 2 விக்கெட்டுக்கு 232 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா 105 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.