இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்
|வங்காளதேச அணி, 55.5 ஓவர்களில் 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது.
சாட்டிங்காம்,
இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சாட்டிங்காம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. கேப்டன் கே.எல்.ராகுல், சுப்மன் கில், விராட் கோலி ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட்டாகினர்.
ரிஷப் பந்த் சற்று அதிரடி காட்டி 46 ரன்களில் அவுட்டானார். இந்திய அணி விக்கெட்களை இழந்து தடுமாறிய போது புஜாரா - ஸ்ரேயாஸ் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். வங்கதேச பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்ட இந்த ஜோடி 149 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். புஜாரா 90 ரன்னிலும் ஸ்ரேயாஷ் ஐயர் 86 ரன்னிலும் அவுட்டாகினர்.
பின்வரிசையில் அஸ்வின் சிறப்பாக விளையாடி 58 ரன்கள் சேர்த்தார். குல்பித் யாதவ் 40 ரன்கள் என மாஸ்கட்ட இறுதியாக இந்திய அணி 404 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. வங்கதேசம் சார்பில் மெஹதி மற்றும் இஸ்லாம் தலா 4 விக்கெட்களை வீழ்த்தினர்.
இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க வீரர் நஜ்முல் உசேன் முதல் பந்திலேயே சிராஜ் பந்துவீச்சில் பந்திடம் கேட்ச் கொடுத்து அவுட்டனார். அடுத்து வந்த யாசிர் அலி உமேஷ் யாதவ் வேகத்தில் சிக்கி அவுட்டானார்.
வங்காளதேச அணி தொடர்ந்து இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தது. 100 ரன்கள் எடுப்பதற்குள் அந்த அணி 6 விக்கெட்டை மளமளவென இழந்தது. முதல் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில், வங்கதேச அணி 8 விக்கெட்களை இழந்து 133 ரன்கள் எடுத்திருந்தது.
இந்த நிலையில், இன்று தொடர்ந்து ஆடிய அந்த அணி, 55.5 ஓவர்களில் 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் ஒருவர் கூட 30 ரன்னை தாண்டவில்லை.
வங்கதேச அணி சார்பில் அதிகப்பட்சமாக முஷ்பீர் ரகுமான் 28 ரன்கள் எடுததார். சிறப்பாக பந்துவீசிய சுழல்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டையும், முகமது சிராஜ் 3 விக்கெட்டையும் உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
வங்காளதேச அணி பாலோ ஆன் ஆன நிலையிலும் இந்திய அணியே தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்சில் விளையாடி வருகிறது.