இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்; முக்கிய முடிவை கையிலெடுக்கும் ஸ்டோக்ஸ்
|இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 1-2 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது.
ராஜ்கோட்,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முடிவடைந்துள்ள 3 போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து இந்த தொடரில் 1-2 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முக்கியமான முடிவு ஒன்றை கையிலெடுத்துள்ளார். அதாவது இந்த போட்டியில் அவர் பந்து வீச உள்ளதாக சூசகமாக தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு முழங்காலில் ஏற்பட்ட காயத்திற்கு மேற்கொண்ட அறுவை சிகிச்சைக்கு பின் ஸ்டோக்ஸ் எந்த வித போட்டிகளிலும் பவுலிங் செய்யவில்லை. ஒரு முழு பேட்ஸ்மேனாகவே விளையாடி வருகிறார். ஆனால் இந்த தொடரில் இங்கிலாந்து பின்தங்கி உள்ள நிலையில் இந்த முடிவை கையிலெடுத்துள்ளார்.
3-வது போட்டியின் முடிவில் அவரிடம் எஞ்சிய இந்திய தொடரின்போது பந்துவீசலாமா என்று கேட்டபோது, "நான் ஆம் என்றும் சொல்லவில்லை. இல்லை என்றும் சொல்லவில்லை. நான் பெரும்பாலான விஷயங்களைப் பற்றி எப்போதும் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். நான் பந்து வீசலாமா என்பது குறித்து மருத்துவக் குழுவுடன் இன்னும் விரிவாகப் பேசுவேன். பயிற்சிகளில் நான் 100 சதவிகிதம் பந்துவீச முடிந்தது. இது எனக்கு மிகவும் நன்றாக இருந்தது. போட்டியில் நான் பந்துவீசியிருக்கலாம் என்று உணர்ந்தேன்' என்று கூறினார்.
இருப்பினும் அவர் பந்து வீசுவாரா? இல்லையா? என்பது போட்டி நடைபெறும்போதே தெரியவரும்.