இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: டேவிட் வார்னர் விலகல் - காரணம் என்ன?
|இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது.
மும்பை,
இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்த இரு டெஸ்ட் போட்டியிலும் உலகின் நம்பர் 1 டெஸ்ட் அணியான ஆஸ்திரேலிய மூன்று நாட்களுக்குள் அடங்கியது கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இரு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதில் தனது வாய்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி மார்ச் 1ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் பின்னடைவாக அந்த அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான எஞ்சிய டெஸ்ட் தொடரில் இருந்து விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லியில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியின் போது முகமது சிராஜ் வீசிய பந்து வார்னரின் தலையில் பலமாக தாக்கியது. இதனால் நிலைகுலைந்த வார்னர் 2வது டெஸ்ட் போட்டியில் 2வது இன்னிங்சில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் தொடரில் இருந்து விலகி உள்ள வார்னர் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்பாரா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.