இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்; இந்திய முன்னணி வீரர் பங்கேற்பது சந்தேகம்..? - வெளியான தகவல்
|இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
புதுடெல்லி,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த முன்னணி வீரர்களான ஜடேஜா மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் காயம் காரணமாக விலகினர். இது இந்திய அணிக்கு பின்னடைவை கொடுத்துள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் காயம் காரணமாக இடம் பெறாத முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி எஞ்சிய போட்டிகளிலும் இடம் பெறுவது சந்தேகம் என தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த உலகக்கோப்பை தொடரின்போது காயம் அடைந்த முகமது ஷமி அதன் பின்னர் எந்தவித கிரிக்கெட்டிலும் ஆடாமல் இருந்து வருகிறார். அவர் காயத்திற்கு லண்டனில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அறுவை சிகிச்சை மேற்கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இருந்தாலும் அவர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதில் சந்தேகம் நிலவுகிறது.