டெஸ்ட் போட்டி ; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து
|இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா தேர்வு செய்யப்பட்டார்.
மவுண்ட் மவுன்கானுய்,
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 4-ம் தேதி தொடங்கியது. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 511 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 240 ரன்களும், வில்லியம்சன் 118 ரன்களும் குவித்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் அந்த அணியின் கேப்டன் நீல் பிராண்ட் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா நியூசிலாந்து அணியின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 162 ரன்களில் சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக கீகன் பீட்டர்சன் 45 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக மேட் ஹென்ரி மற்றும் சான்ட்னர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
பின்னர் 349 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 4 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் அடித்திருந்தபோது டிக்ளேர் செய்தது. இந்த இன்னிங்சிலும் நியூசிலாந்து வீரர் வில்லியம்சன் சதமடித்து அசத்தினார். இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணிக்கு நியூசிலாந்து 529 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயம் செய்தது.
இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 10 விக்கெட்டுகளை இழந்து 247 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் நியூசிலாந்து 281 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக டேவிட் பெடிங்காம் 87 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக கைல் ஜேமிசன் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா தேர்வு செய்யப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2-வது மற்றும் கடைசி போட்டி வரும் 13-ம் தேதி தொடங்க உள்ளது.