< Back
கிரிக்கெட்
2 நாட்களில் முடிந்த டெஸ்ட் போட்டி: கேப்டவுன் ஆடுகளம் குறித்து ஐ.சி.சி. அதிருப்தி
கிரிக்கெட்

2 நாட்களில் முடிந்த டெஸ்ட் போட்டி: கேப்டவுன் ஆடுகளம் குறித்து ஐ.சி.சி. அதிருப்தி

தினத்தந்தி
|
10 Jan 2024 2:34 AM IST

2 நாட்களுக்குள் முடிந்த கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் மொத்தமாக 642 பந்துகள் மட்டுமே வீசப்பட்டன.

துபாய்,

சமீபத்தில் தென்ஆப்பிரிக்காவின் கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்சில் நடந்த டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்து வரலாறு படைத்தது. 2 நாளுக்குள் முடிந்த இந்த டெஸ்டில் 642 பந்துகள் மட்டுமே வீசப்பட்டன. 147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த ஓவர்களில் முடிவு கிடைத்த டெஸ்ட் இது தான்.

ஆடுகளத்தில் முதல் நாளில் பந்து தாறுமாறாக பவுன்சுடன், நன்கு ஸ்விங்கும் ஆனது. இதனால் ஒரே நாளில் 23 விக்கெட் சரிந்த அதிசயமும் அரங்கேறியது. போட்டிக்கு பிறகு பேசிய இந்திய கேப்டன் ரோகித் சர்மா, 'இந்த ஆடுகளம் அபாயகரமானதாகவும், கடும் சவால் நிறைந்ததாகவும் இருந்தது. இது போன்ற ஆடுகளத்தில் விளையாடுவதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் இந்திய ஆடுகளங்களில் முதல் நாளில் இருந்து சுழற்பந்து வீச்சு எடுபட்டால் குறை சொல்ல வந்து விடுவார்கள். அதே சமயம் வெளிநாட்டு ஆடுகளங்களில் முதல் நாளில் இருந்து முழுமையாக வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைந்தால் வாயை மூடிக்கொண்டு இருப்பார்கள். ஆடுகள மதிப்பீடு விஷயத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) பாகுபாடு காட்டக்கூடாது' என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் கேப்டவுன் ஆடுகளத்தன்மை திருப்திகரமாக இல்லை என்று ஐ.சி.சி. மதிப்பீட்டு இருப்பதுடன் நடவடிக்கையும் எடுத்துள்ளது. ஆடுகளம் குறித்து இரு நாட்டு கேப்டன்களுடன் ஆலோசித்த பிறகு போட்டி நடுவர் கிறிஸ் பிராட் ஐ.சி.சி.யிடம் சமர்பித்த அறிக்கையில், 'கேப்டவுன் ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு மிகவும் கடினமாக இருந்தது. பந்து வேகமாக எகிறியதுடன், சில சமயம் அச்சுறுத்தும் வகையிலும் இருந்ததால், ஷாட்டுகளை அடிக்க முடியாமல் பேட்ஸ்மேன்கள் திணறினர். சில பேட்டர்களின் கையுறைகளில் பந்து தாக்கியது. பெரும்பாலான விக்கெட் சமாளிக்க முடியாத பவுன்சர் பந்துகளிலேயே சரிந்தன. எனவே ஆடுகளத்தன்மையில் திருப்தி இல்லை' என்று கூறியுள்ளார்.

அத்துடன் இந்த மைதானத்திற்கு ஒரு தகுதி இழப்பு புள்ளியும் விதிக்கப்பட்டுள்ளது. தகுதி இழப்பு புள்ளி செயல்பாடு 5 ஆண்டு அமலில் இருக்கும். இந்த 5 ஆண்டுகளில் இத்தகைய புள்ளி எண்ணிக்கை 6-ஆக உயர்ந்தால் அந்த மைதானத்தில் சர்வதேச போட்டிகள் நடத்த ஓராண்டு தடை விதிக்கப்படும். இதே எண்ணிக்கை 12-ஐ எட்டினால் இரண்டு ஆண்டு தடையை சந்திக்க நேரிடும். தற்போதைய நடவடிக்கையை எதிர்த்து தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் 14 நாட்களுக்குள் ஐ.சி.சி.யிடம் அப்பீல் செய்யலாம்.

மேலும் செய்திகள்