ஒவ்வொரு அணியிலும் ஜஸ்பிரித் பும்ரா போன்ற ஒரு பந்துவீச்சாளர் இருந்தால் டெஸ்ட் கிரிக்கெட் வளம்பெறும் - இர்பான் பதான்
|தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2 போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்ட ஜஸ்பிரித் பும்ரா தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
மும்பை,
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய இந்திய அணி அங்கு நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. இதில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியடைந்த இந்திய அணி, அதன்பின் நடைபெற்ற 2-வது போட்டியில் அபார வெற்றி பெற்றது. இந்த டெஸ்ட் தொடரில் 2 போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்ட ஜஸ்பிரித் பும்ரா தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா உள்ளதுபோல் ஒவ்வொரு அணிக்கும் ஒரு வீரர் கிடைத்தால் டெஸ்ட் கிரிக்கெட் வளம்பெறும் என்று முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், 'காயத்தால் அறுவை சிகிச்சை மேற்கொண்ட பின்னரும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளார் பும்ரா. இவருக்கு மேல் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான பெரிய தூதுவர் இருக்க முடியாது என்றே நினைக்கிறேன். இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா உள்ளதுபோல் ஒவ்வொரு அணிக்கும் ஒரு வீரர் கிடைத்தால் டெஸ்ட் கிரிக்கெட் வளம்பெறும். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரின் உடல்மொழிக்கு நான் ரசிகனாகவே மாறிவிட்டேன். அதிலும் காயத்திற்கு பின் விளையாடும் முதல் டெஸ்ட் தொடரிலேயே தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார். என்னை பொறுத்தவரை இந்திய கிரிக்கெட்டுக்கு மட்டுமல்லாமல் உலக கிரிக்கெட்டுக்கும் பும்ராவின் செயல்பாடு மிகப்பெரிய ஊக்கமாக அமைந்துள்ளது' என்று கூறினார்.