டெஸ்ட் கிரிக்கெட்: எங்களால் ஒரே நாளில் 400 ரன்கள் குவிக்க முடியும் - இங்கிலாந்து வீரர் நம்பிக்கை
|இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி வரும் 26-ம் தேதி தொடங்க உள்ளது.
பர்மிங்காம்,
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் இங்கிலாந்து 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி வரும் 26-ம் தேதி பர்மிங்காமில் நடைபெற உள்ளது.
இந்த போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்து அணியின் முன்னணி வீரரான ஆலி போப் அளித்த பேட்டியில், "'சில நேரங்களில் நாங்கள் ஒரே நாளில் 280 முதல் 300 ரன்கள் எடுக்கலாம். அது சூழ்நிலைக்கு தகுந்தபடி விளையாடுவதால் நடக்கக்கூடியது. ஆனால் வருங்காலத்தில் ஒரே நாளில் 500 முதல் 600 ரன்களையும் எங்களால் எடுக்க முடியும்.
அந்த நாள் வெகு தொலைவில் இல்லை. ரன் வேட்கை எப்போதும் எங்களிடம் உள்ளது. இப்போது அது கொஞ்சம் கூடுதலாக இருக்கிறது. ஒரு பேட்டிங் அணியாக கருணையற்ற முறையில் அடித்து நொறுக்க விரும்புகிறோம். இந்த மாதிரி விளையாடுவது டெஸ்ட் கிரிக்கெட்டின் ஒரு அங்கம்" என்றார்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 1936-ம் ஆண்டு மான்செஸ்டரில் நடந்த இங்கிலாந்து- இந்தியா இடையிலான டெஸ்டில் 2-வது நாளில் 588 ரன்கள் எடுக்கப்பட்டதே ஒரு நாளில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகும். அதை கடந்து 600 ரன் மைல்கல்லை விரைவில் எட்டுவோம் என்று ஆலி போப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.