டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியாவின் 48 ஆண்டு கால சாதனையை முறியடித்த இலங்கை
|வங்காளதேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இலங்கை 531 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
சட்டோகிராம்,
வங்காளதேசம், இலங்கை இடையிலான 2-வது டெஸ்ட் சட்டோகிராமில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தது .முதல் இன்னிங்சில் இலங்கை 531 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணியின் குசால் மெண்டிஸ் 93 ரன்னும், கமிந்து மெண்டிஸ் 92 ரன்னும், கருணரத்னே 86 ரன்னும், தனஞ்செய டி சில்வா 70 ரன்னும், சண்டிமால் 59 ரன்னும், நிஷான் மதுஷ்கா 57 ரன்னும் எடுத்தனர்.
வங்காளதேசத்தின் ஷகிப் அல் ஹசன் 3 விக்கெட்டும், ஹசன் மெஹ்மூத் 2 விக்கெட்டும் கைப்பற்றினர். இதையடுத்து, முதல் இன்னிங்சை விளையாடிய வங்காளதேச அணி 2வது நாள் நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 55 ரன்கள் எடுத்துள்ளது. முன்னதாக இலங்கையின் முதல் இன்னிங்சில் அந்த அணி தரப்பில் 6 வீரர்கள் அரைசதம் அடித்தார்களே தவிர ஒருவரும் அதை செஞ்சுரியாக மாற்றவில்லை.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் யாரும் சதம் அடிக்காமல் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுதான். இதற்கு முன்பு இந்த வகையில் 1976-ம் ஆண்டு இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக 524 ரன் திரட்டியதே அதிகபட்சமாக இருந்தது. அந்த 48 ஆண்டு கால சாதனையை இலங்கை அணி தகர்த்துள்ளது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணி ஆட்டம் நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 55 ரன் எடுத்துள்ளது. இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.