< Back
கிரிக்கெட்
டெஸ்ட் கிரிக்கெட்: போட்டி ஒன்று... சாதனைகள் பல.. ஜோ ரூட் அசத்தல்
கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட்: போட்டி ஒன்று... சாதனைகள் பல.. ஜோ ரூட் அசத்தல்

தினத்தந்தி
|
1 Sep 2024 7:56 AM GMT

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்ஸ்களிலும் ஜோ ரூட் சதமடித்து அசத்தினார்.

லண்டன்

இங்கிலாந்து - இலங்கை அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இங்கிலாந்து 427 ரன்களும், இலங்கை 196 ரன்களும் எடுத்தன.

இதனையடுத்து 231 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 54.3 ஓவர்களில் 251 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜோ ரூட் 103 ரன்கள் குவித்தார். இவர் முதல் இன்னிங்சிலும் சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக அசிதா பெர்னண்டோ மற்றும் லஹிரு குமரா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதன் மூலம் இலங்கை அணிக்கு 483 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதை நோக்கி ஆடிய இலங்கை அணி 3-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 53 ரன்கள் எடுத்துள்ளது. இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

இந்த போட்டியின் 2-வது இன்னிங்ஸ்களிலும் சதமடித்த ஜோ ரூட் பல சாதனைகள் படைத்து அசத்தியுள்ளார்.

அவை விவரம் பின்வருமாறு:-

1. ஜோ ரூட் 2-வது இன்னிங்சில் அடித்த சதம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 34-வது சதமாக பதிவானது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதங்கள் அடித்த வீரர்களின் மாபெரும் சாதனை பட்டியலில் ஜாம்பவான்கள் டிராவிட், பிரையன் லாரா, யூனிஸ் கான், ஜெயவர்தனே ஆகியோரை சமன் செய்துள்ளார்.

இந்த பட்டியலில் சச்சின் 51 சதங்களுடன் முதலிடத்திலும், காலிஸ் (45) 2-வது இடத்திலும், பாண்டிங் (41) 3-வது இடத்திலும், சங்ககரா (38) 4-வது இடத்திலும், டிராவிட் (36) 5-வது இடத்திலும் உள்ளனர்.

2. டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த வீரர்களின் சாதனை பட்டியலில் 6 சதங்களுடன் 3-வது வீரராக இணைந்துள்ளார்.

அந்த பட்டியல்:-

1. சச்சின் - 9 சதங்கள்

2.யூனிஸ் கான் - 8 சதங்கள்

3.அசார் அலி / ஜோ ரூட் - 6 சதங்கள்

3.இங்கிலாந்து அணிக்காக குறிப்பிட்ட ஒரு மைதானத்தில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்துள்ளார்.

அந்த பட்டியல்:-

1. ஜோ ரூட் - 7 சதங்கள் - லண்டன், லார்ட்ஸ் மைதானம்

2. கிரகாம் கூச்/ மைக்கேல் வாகன் - 6 சதங்கள் லண்டன், லார்ட்ஸ் மைதானம்

4. சர்வதேச கிரிக்கெட்டில் 50 அல்லது அதற்கு மேற்பட்ட சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் 50 சதங்களுடன் 9-வது வீரராக இணைந்துள்ளார்.

மேலும் செய்திகள்