டெஸ்ட் கிரிக்கெட்; பவுலிங் மட்டுமின்றி பேட்டிங்கிலும் சாதனை படைக்கும் லயன்
|நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் லயன் 41 ரன்கள் அடித்தார்.
வெலிங்டன்,
நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அந்நாட்டு அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இந்த தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த மாதம் 29-ஆம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி தங்களது முதல் இன்னிங்சில் 383 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக கேமரூன் கிரீன் ஆட்டமிழக்காமல் 174 ரன்கள் குவித்தார்.
பின்னர் தங்களது முதல் இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து அணி 179 ரன்களை மட்டுமே அடித்தது. இதனையடுத்து 204 ரன்கள் முன்னிலையுடன் தங்களது 2-வது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது 164 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் காரணமாக நியூசிலாந்து அணி 369 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது விளையாடி வருகிறது.
அந்த வகையில் மூன்றாம் நாள் முடிவில் நியூசிலாந்து அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் அடித்துள்ளது. அந்த அணி வெற்றி பெற இன்னும் 258 ரன்கள் தேவைப்படும் நிலையில் நாளை 4-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியின் 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய வீரர் லயன் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் இதுவரை சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 128 போட்டிகளில் பேட்டிங் செய்து 1501 ரன்களை குவித்துள்ளார். இதில் அவர் ஒரு அரைசதம் கூட இதுவரை அடித்ததில்லை.
இதன் மூலம் ஒரு அரைசதம் கூட அடிக்காமல் அதிக டெஸ்ட் ரன்களை விளாசிய வீரர்களின் சாதனை பட்டியலில் நாதன் லயன் முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்து வெஸ்ட் இண்டீஸ் வீரர் கேமர் ரோச்சும், 3-வது இடத்தில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் வக்கர் யூனிசும் உள்ளனர்.