< Back
கிரிக்கெட்
டெஸ்ட் கிரிக்கெட்: வில்லியம்சன், ஸ்டீவ் சுமித் ஆகியோரின் சாதனையை சமன் செய்த ஜோ ரூட்
கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட்: வில்லியம்சன், ஸ்டீவ் சுமித் ஆகியோரின் சாதனையை சமன் செய்த ஜோ ரூட்

தினத்தந்தி
|
21 July 2024 9:04 PM IST

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட்டில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் சதமடித்து அசத்தினார்.

நாட்டிங்ஹாம்,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சில் 416 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 457 ரன்கள் அடித்தது. இதனையடுத்து 41 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக்கின் அபார சதத்தின் உதவியுடன் 425 ரன்கள் குவித்தது. இதன் மூலம் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 385 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

இந்த போட்டியில் ஜோ ரூட் அடித்த சதம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் அடித்த 32-வது சதமாக பதிவானது. இதன் மூலம் தற்போது விளையாடும் வீரர்களில் (ஓய்வு பெற்ற வீரர்களை தவிர்த்து) அதிக சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த வில்லியம்சன் மற்றும் ஸ்டீவ் சுமித் ஆகியோரின் சாதனையை சமன் செய்துள்ளார். இந்த பட்டியலில் 29 சதங்களுடன் விராட் கோலி 2-வது இடத்தில் உள்ளார்.

மேலும் செய்திகள்