< Back
கிரிக்கெட்
டெஸ்ட் கிரிக்கெட்; அலய்ஸ்டர் குக்கின் மாபெரும் சாதனையை தகர்த்த ஜோ ரூட்

கோப்புப்படம்

கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட்; அலய்ஸ்டர் குக்கின் மாபெரும் சாதனையை தகர்த்த ஜோ ரூட்

தினத்தந்தி
|
31 Aug 2024 9:33 PM IST

டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து முன்னாள் வீரர் அலய்ஸ்டர் குக்கின் மாபெரும் சாதனை ஒன்றை ஜோ ரூட் தகர்த்துள்ளார்.

லண்டன்,

இலங்கைக்கு எதிராக இங்கிலாந்து தங்களுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து வென்ற நிலையில், 2-வது போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 427 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக ஜோ ரூட் 143 ரன்களும், கஸ் அட்கின்சன் 118 ரன்களும் அடித்தனர். இலங்கை சார்பில் அதிகபட்சமாக அசிதா பெர்னாண்டோ 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி இங்கிலாந்து பந்து வீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 196 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கமிந்து மென்டிஸ் 74 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் அட்கின்சன், கிறிஸ் வோக்ஸ், மேத்யூ போட்ஸ், ஆலி ஸ்டோன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் 231 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி நேற்றைய 2-வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 25 ரன்கள் அடித்திருந்தது. பென் டக்கெட் 15 ரன்களுடனும், ஆலி போப் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில் 3ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

இதில் தொடர்ந்து பேட்டிங் ஆடிய இங்கிலாந்து தனது 2வது இன்னிங்சில் 54.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 251 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் அபாரமாக ஆடிய ஜோ ரூட் சதம் (103 ரன்) அடித்து அசத்தினார்.

இலங்கை தரப்பில் அசிதா பெர்னாண்டோ, லஹிரு குமாரா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து முதல் இன்னிங்சில் பெற்ற 231 ரன் முன்னிலையையும் சேர்ந்து இலங்கை அணிக்கு 483 ரன்களை வெற்றி இலக்காக இங்கிலாந்து நிர்ணயித்தது. இதையடுத்து இலங்கை தனது 2வது இன்னிங்சை ஆடி வருகிறது.

இந்நிலையில், இங்கிலாந்தின் 2வது இன்னிங்சில் ஜோ ரூட் சதம் அடித்தது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது 34வது சதமாக பதிவானது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து முன்னாள் வீரர் அலய்ஸ்டர் குக்கின் மாபெரும் சாதனை ஒன்றை ஜோ ரூட் தகர்த்துள்ளார். அதாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்காக அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் குக்கை பின்னுக்கு தள்ளி ஜோ ரூட் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்காக அதிக சதம் அடித்தவர்கள்;

ஜோ ரூட் - 34 *

அலய்ஸ்டர் குக் - 33

கெவின் பீட்டர்சன் - 23

மேலும் செய்திகள்