< Back
கிரிக்கெட்
டெஸ்ட் கிரிக்கெட் உங்களது திறமையை சோதிக்கக்கூடியது- இளம் வீரர்களுக்கு டிராவிட் அறிவுரை

image courtesy: AFP

கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட் உங்களது திறமையை சோதிக்கக்கூடியது- இளம் வீரர்களுக்கு டிராவிட் அறிவுரை

தினத்தந்தி
|
11 March 2024 8:20 AM IST

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் வெற்றிக்கு பிறகு வீரர்கள் மத்தியில் ராகுல் டிராவிட் பேசிய வீடியோவை பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ளது.

தர்மசாலா,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில், மற்ற அனைத்திலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இதில் தர்மசாலாவில் நடந்த 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி 3-வது நாளுக்குள் இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை ருசித்தது. அத்துடன் தொடரையும் 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

விராட் கோலி, முகமது ஷமி ஆகிய மூத்த வீரர்கள் இல்லாத நிலையில் இளம் வீரர்களை கொண்ட இந்தியா, இங்கிலாந்தை அடக்கி சாதித்து காட்டியிருக்கிறது. இந்த தொடரில் இந்திய அணியில் 5 வீரர்கள் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார்கள். இளம் தொடக்க ஆட்டக்காரர் ஆன 22 வயதான ஜெய்ஸ்வால் இரு இரட்டை சதம் உள்பட 712 ரன்கள் குவித்து கவனத்தை ஈர்த்தார்.

இந்த நிலையில் வெற்றிக்கு பிறகு வீரர்கள் மத்தியில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசிய வீடியோவை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. அதில் டிராவிட் கூறியிருப்பதாவது:-

டெஸ்ட் கிரிக்கெட் உங்களது திறமையை சோதிக்கக்கூடியது. சில நேரங்களில் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் கடினமாக இருப்பதை பார்க்கிறோம். அப்படிப்பட்ட ஒரு தொடராக இது அமைந்தது. இறுதியில் தொடர் மிகுந்த திருப்தியை அளித்தது. குறிப்பாக முதல் டெஸ்டில் தோற்ற நிலையில் சரிவில் இருந்து மீண்டெழுந்து அடுத்த 4 போட்டிகளை வென்றது மனநிறைவை தருகிறது. இது ஒரு அற்புதமான தொடர்.

இந்த தொடரில் நிறைய இளம் வீரர்கள் இடம் பெற்று இருந்தீர்கள். நீங்கள் சிறப்பாக செயல்பட மற்ற வீரர்களின் உதவி தேவை. நீங்கள் ஒரு பேட்ஸ்மேனாக அல்லது பந்து வீச்சாளராக என யாராக இருந்தாலும் உங்களின் வெற்றி அணியில் உள்ள மற்ற வீரர்களின் வெற்றியுடன் தொடர்புடையது. ஒவ்வொருவரின் வெற்றிக்கும் உங்களது பங்களிப்பை வழங்க வேண்டியது அவசியம். முன்னோக்கி செல்ல உண்மையிலேயே இது முக்கியமானது.

வெற்றியோ அல்லது தோல்வியோ இத்தகைய தொடர் உங்களுக்கு நிறைய கற்றுக்கொடுக்கப்போகிறது. இதில் இருந்து நீங்கள் பல ஏற்ற இறக்கங்களை கடந்து செல்வீர்கள். இவ்வாறு டிராவிட் பேசினார்.

மேலும் செய்திகள்