< Back
கிரிக்கெட்
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: நியூசிலாந்து அணி சிறப்பான தொடக்கம்
கிரிக்கெட்

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: நியூசிலாந்து அணி சிறப்பான தொடக்கம்

தினத்தந்தி
|
28 Dec 2022 1:55 AM IST

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணி சிறப்பான தொடக்கம் கண்டுள்ளது.

கராச்சி,

சல்மான் சதம்

பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கராச்சியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த பாகிஸ்தான் முதல் நாள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 317 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் பாபர் அசாம் (161 ரன்), அஹா சல்மான் (3 ரன்) களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 2-வது நாளான நேற்று பாகிஸ்தான் வீரர்கள் தொடர்ந்து ஆடினர். டிம் சவுதியின் முதல் ஓவரிலேயே பாபர் அசாம் (161 ரன்) விக்கெட் கீப்பர் பிளன்டெலிடம் கேட்ச் ஆனார். இதன் பின்னர் அஹா சல்மான் நிலைத்து நின்று விளையாட மறுபக்கம் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. அவருக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்த நமன் அலி 7 ரன் மட்டுமே எடுத்த போதிலும் 75 பந்துகளை சமாளித்தார். பின்வரிசை வீரர்களின் உதவியுடன் தனது, 'கன்னி' சதத்தை ருசித்த அஹா சல்மான் 103 ரன்களில் (155 பந்து, 17 பவுண்டரி) கடைசி விக்கெட்டாக எல்.பி.டபிள்யூ. ஆனார்.

பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 130.5 ஓவர்களில் 438 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் டிம் சவுதி 3 விக்கெட்டும், அஜாஸ் பட்டேல், பிரேஸ்வெல், சோதி தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

தொடக்கத்தில் அசத்திய நியூசிலாந்து

பின்னர் மெதுவான தன்மை கொண்ட இந்த ஆடுகளத்தில் நியூசிலாந்தின் இன்னிங்சை டாம் லாதமும், டிவான் கான்வேயும் தொடங்கினர். நிதானமாக ஆடிய இந்த ஜோடி சூப்பரான அடித்தளம் அமைத்தது. இவர்களை பிரிக்க பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 3 சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தி பார்த்தும் பலன் இல்லை. 31-வது ஓவரில் இந்த கூட்டணி உடைந்திருக்க வேண்டும். நமன் அலியின் சுழலில் பந்து கான்வேயின் பேட்டில் லேசாக உரசிக் கொண்டு விக்கெட் கீப்பர் சர்ப்ராஸ் அகமதுவிடம் சிக்கியது. ஆனால் சர்ப்ராஸ் தவிர மற்றவர்கள் அப்பீல் செய்யவில்லை. நடுவரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் டி.வி. ரீப்ளேயில் பந்து பேட்டில் லேசாக உரசுவது தெளிவாக தெரிந்தது. டி.ஆர்.எஸ்.-ன்படி பாகிஸ்தான் அப்பீல் செய்திருந்தால் கான்வே வெளியேறி இருப்பார்.

அதன் பிறகு ஸ்கோருக்கு மேலும் வலுவூட்டிய இவர்கள் அரைசதத்தை கடந்து கம்பீர பயணத்தை தொடர்ந்தனர். ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 47 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 165 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தான் மண்ணில் நியூசிலாந்து தொடக்க ஜோடியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு 1965-ம் ஆண்டு 136 ரன்கள் எடுத்ததே இந்த வகையில் அதிகபட்சமாக இருந்தது.

கான்வே சாதனை

லாதம் 78 ரன்களுடனும் (126 பந்து, 8 பவுண்டரி), கான்வே 82 ரன்களுடனும் (156 பந்து, 12 பவுண்டரி) அவுட் ஆகாமல் உள்ளனர். கான்வே டெஸ்டில் ஆயிரம் ரன்களையும் (19 இன்னிங்ஸ்) நேற்று எட்டினார். இதன் மூலம் அதிவேகமாக ஆயிரம் ரன்களை கடந்த நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றார். 3-வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.

மேலும் செய்திகள்