வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட்; முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தென்ஆப்பிரிக்கா 314 ரன்கள் சேர்ப்பு
|ஆட்ட நேர முடிவில் தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 82 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 314 ரன்கள் சேர்த்துள்ளது.
செஞ்சூரியன்,
தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நேற்று தொடங்கியது. இதில் 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்காவுக்கு டீன் எல்கரும், எய்டன் மார்க்ரமும் முதல் விக்கெட்டுக்கு 141 ரன்கள் திரட்டி அருமையான தொடக்கம் ஏற்படுத்தினர்.
டீன் எல்கர் 71 ரன்னில் பெவிலியன் திரும்பினார். தனது 6-வது சதத்தை பூர்த்தி செய்த மார்க்ரம் 115 ரன்களில் (174 பந்து, 18 பவுண்டரி) கேட்ச் ஆனார். மிடில் வரிசையில் புதுமுக வீரர் டோனி டி டோர்ஸி (28 ரன்) தவிர மற்றவர்களின் பேட்டிங் குறிப்பிடும்படி இல்லை. கேப்டன் பவுமா டக்-அவுட்டில் வீழ்ந்தார். ஆட்ட நேர முடிவில் தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 82 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 314 ரன்கள் சேர்த்துள்ளது. 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெறும்.