இலங்கைக்கு எதிரான டெஸ்ட்; முதல் இன்னிங்சில் 340 ரன்கள் குவித்த நியூசிலாந்து
|நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக டாம் லதாம் 70 ரன்கள் எடுத்தார்.
காலே,
இலங்கை - நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை 91.5 ஓவர்களில் 305 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் 114 ரன்கள் குவித்தார். நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக வில்லியம் ஒரூர்க் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து நேற்றைய 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்கள் அடித்திருந்தது. டேரில் மிட்செல் 41 ரன்களுடனும், டாம் பிளண்டெல் 18 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
நியூசிலாந்து 50 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்று 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கியது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த டேரில் மிட்செல் அரைசதம் அடித்த நிலையில் 57 ரன்னிலும், பிளண்டெல் 25 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து களம் புகுந்த க்ளென் பிலிப்ஸ் ஒரு புறம் நிலைத்து நின்று ஆட மறுமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தது.
இதில் சாண்ட்னெர் 2 ரன், சவுதி 3 ரன், அஜாஸ் படேல் 6 ரன், வில்லியம் ஓ ரூர்க் 2 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர். இறுதியில் நியூசிலாந்து தனது முதல் இன்னிங்சில் 90.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 340 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக டாம் லதாம் 70 ரன்கள் எடுத்தார். இலங்கை தரப்பில் பிரபாத் ஜெயசூரிய 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன் மூலம் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 35 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து 35 ரன் பின்னிலையுடன் இலங்கை தனது 2வது இன்னிங்சை ஆடி வருகிறது.