இலங்கைக்கு எதிரான டெஸ்ட்; 2-வது இன்னிங்சில் ஆப்கானிஸ்தான் சிறப்பான தொடக்கம்
|இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 439 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.
கொழும்பு,
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஹஸ்மத்துல்லா ஷகிடி தலைமையிலான ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடுகிறது. இதன்படி இலங்கை- ஆப்கானிஸ்தான் இடையிலான அந்த டெஸ்ட் போட்டி கொழும்புவில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சில் 198 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக ரஹ்மத் 91 ரன்கள் அடித்தார். இலங்கை அணியில் அதிகபட்சமாக விஷ்வா பெர்னாண்டோ 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 2-வது நாள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 410 ரன்கள் குவித்திருந்தது. இதனையடுத்து 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த இலங்கை 29 ரன்களுக்குள் எஞ்சிய 4 விக்கெட்டுகளையும் இழந்து 439 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக மேத்யூஸ் 141 ரன்களும், சன்டிமால் 107 ரன்களும் அடித்து அசத்தினர். ஆப்கானிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக நவீத் சத்ரன் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் 241 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக இப்ராஹிம் சத்ரன் மற்றும் நூர் அலி சத்ரன் களமிறங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடி அணிக்கு வலுவான தொடக்கம் கொடுத்தனர். இவர்களில் நூர் அலி சத்ரன் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் கை கோர்த்த இப்ராஹிம் சத்ரன் - ரஹ்மத் ஷா இணை 3-வது நாளில் மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டது.
3-வது நாள் முடிவில் ஆப்கானிஸ்தான் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 199 ரன்கள் அடித்து சிறப்பான தொடக்கம் கண்டுள்ளது. சிறப்பாக விளையாடி சதமடித்த இப்ராஹிம் சத்ரன் 101 ரன்களிலும், ரஹ்மத் ஷா 46 ரன்களிலும் களத்தில் உள்ளனர்.
நாளை 4-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.