தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்; வில்லியம்சன்-ரவீந்திரா அபார சதம்...முதல் நாளில் நியூசிலாந்து 258 ரன்கள் குவிப்பு
|நியூசிலாந்து தரப்பில் கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா இருவரும் சதம் அடித்து அசத்தினர்.
மவுண்ட் மவுன்கானுய்,
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக டாம் லதாம், டெவான் கான்வே ஆகியோர் களம் இறங்கினர். இதில் லதாம் 20 ரன், கான்வே 1 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து ரவீந்திரா, வில்லியம்சன் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
இருவரும் நிதானமாக ஆடி சதம் அடித்து அசத்தினர். இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 86 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டுமே இழந்து 258 ரன்கள் குவித்துள்ளது. நியூசிலாந்து தரப்பில் வில்லியம்சன் 112 ரன்களுடனும், ரச்சின் ரவீந்திரா 118 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 2ம் நாள் ஆட்டம் நாளை நடைபெற உள்ளது.