ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்; 2-வது இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னிலை
|ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 289 ரன்களில் டிக்ளேர் செய்தது.
பிரிஸ்பேன்,
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் , 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலிய பந்துவீச்சை திறம்பட சமாளித்து ரன்களை சேர்த்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 89.4 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 266 ரன்கள் அடித்திருந்தது.
2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் தனது முதல் இன்னிங்சில் 311 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜோஷ்வா டி சில்வா 79 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. 55 ரன்களுக்குள் 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய ஆஸ்திரேலிய அணியை உஸ்மான் கவாஜா - அலெக்ஸ் கேரி இணை சரிவில் இருந்து மீட்டது. சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். தொடர்ந்து பேட்டிங் செய்த இவர்களில் உஸ்மான் கவாஜா 75 ரன்களிலும், கேரி 65 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் களமிறங்கிய வீரர்களில் கேப்டன் கம்மின்ஸ் சிறப்பாக விளையாடி அணியை முன்னெடுத்து சென்றார். மற்ற வீரர்கள் யாரும் பெரிய அளவில் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. முடிவில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 289 ரன்கள் அடித்திருந்த நிலையில் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக அல்சாரி ஜோசப் 4 விக்கெட்டுகளும், ரோச் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனையடுத்து தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 13 ரன்கள் அடித்துள்ளது. இதன் மூலம் ஆஸ்திரேலியாவை விட வெஸ்ட் இண்டீஸ் 35 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
நாளை 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.