ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்; ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 4 விக்கெட்டுக்கு 102 ரன்கள்
|2-வது நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 37 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 102 ரன்கள் எடுத்துள்ளது.
அடிலெய்டு,
ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (பகல்-இரவு மோதல்) அடிலெய்டில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா தொடக்க நாளில் 3 விக்கெட்டுக்கு 330 ரன்கள் எடுத்திருந்தது. மார்னஸ் லபுஸ்சேன் 120 ரன்களுடனும், டிராவிஸ் ஹெட் 114 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் 2-வது நாளான நேற்றும் இந்த பிங்க் பந்து டெஸ்டில் ஆஸ்திரேலியா முழுமையாக கோலோச்சியது. ஸ்கோர் 428 ஆக உயர்ந்த போது லபுஸ்சேன் 163 ரன்களில் (305 பந்து, 14 பவுண்டரி) கேட்ச் ஆனார். லபுஸ்சேன் வெளியேற்றத்துக்கு பிறகு, இரட்டை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட டிராவிஸ் ஹெட் 175 ரன்களில் (219 பந்து, 20 பவுண்டரி) ரன்-அவுட் ஆனார்.
கேமரூன் கிரீன் (9 ரன்) நிலைக்கவில்லை. விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி (41 ரன்) அணி 500 ரன்களை கடக்க உதவினார். ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 137 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 511 ரன்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தடுமாற்றத்துடன் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஆட்ட நேர முடிவில் 37 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 102 ரன்கள் எடுத்துள்ளது. இன்று 3-வது நாள் ஆட்டம் நடக்கிறது.