< Back
கிரிக்கெட்
இந்திய அணியை வீழ்த்துவது கடினம் - நட்சத்திர ஆஸ்திரேலிய வீரர்
கிரிக்கெட்

இந்திய அணியை வீழ்த்துவது கடினம் - நட்சத்திர ஆஸ்திரேலிய வீரர்

தினத்தந்தி
|
3 Sept 2024 8:21 AM IST

பேட்டிங், பவுலிங் ஆகிய அனைத்து துறைகளிலும் இந்திய அணி நல்ல சமநிலையை கொண்டுள்ளதாக சுமித் கூறியுள்ளார்.

சிட்னி,

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது.

காலம் காலமாக ஆஸ்திரேலியாவில் தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்த இந்தியா 2018/19-ம் ஆண்டு முதல் முறையாக விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை வென்றது. அதே போல 2020/21 தொடரில் ரகானே தலைமையில் இந்தியா 2 - 1 என்ற கணக்கில் மீண்டும் ஆஸ்திரேலிய மண்ணில் கோப்பையை (பார்டர்-கவாஸ்கர் டிராபி) வென்றது. ஆஸ்திரேலியாவில் வைத்து அந்த அணியை தொடர்ந்து மூன்றாவது முறையாக டெஸ்ட் தொடரில் இந்தியா வீழ்த்துமா? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர்.

மறுபுறம் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக்கோப்பை பைனல்களில் இந்தியாவை தோற்கடித்து ஆஸ்திரேலியா வென்றது. அப்படியிருந்தும் கடந்த 2 பார்டர் கவாஸ்கர் தொடர்களில் சொந்த மண்ணில் இந்தியாவிடம் அந்த அணி தோல்வியை சந்தித்தது. எனவே இம்முறை அந்த தோல்விகளுக்கு பதிலடி கொடுத்து இந்தியாவை வீழ்த்த ஆஸ்திரேலியா தயாராகி வருகிறது.

இந்நிலையில் பேட்டிங், பவுலிங் ஆகிய அனைத்து துறைகளிலும் இந்திய அணி நல்ல சமநிலையை கொண்டுள்ளதாக நட்சத்திர ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் சுமித் கூறியுள்ளார். எனவே அவர்களை தங்களுடைய சொந்த மண்ணில் தோற்கடிப்பது மிகவும் கடினமாக இருப்பதாக ஸ்மித் தெரிவித்துள்ளார். அந்த வகையில் சவாலான இந்தியாவை இம்முறை எதிர்கொள்ள ஆர்வத்துடன் இருப்பதாக ஸ்மித் கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "அந்தத் தொடருக்காக மிகவும் ஆர்வத்துடன் உள்ளேன். அது சிறந்த தொடராக இருக்கப் போகிறது. இந்தியா அற்புதமான கிரிக்கெட்டை விளையாடுகின்றனர். நாங்களும் கடந்த சில வருடங்களாக நல்ல கிரிக்கெட்டை விளையாடி வருகிறோம். கடைசியாக இரண்டு முறை இங்கே வந்தபோது நாங்கள் இந்தியாவை தோற்கடிக்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியும். அவர்கள் அணியில் நல்ல சமநிலை இருக்கிறது.

அனைத்து அடிப்படைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. அதனாலேயே அவர்கள் இங்கே நல்ல கிரிக்கெட்டை விளையாடினார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இந்தியாவுக்கு மேலே அழுத்தத்தை போடும்போது அவர்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடினார்கள். அதனால் அவர்களை வீழ்த்துவது மிகவும் கடினமானதாக இருக்கிறது. எனவே இது பெரிய கோடைக் காலமாக இருக்கப் போகிறது. அந்த தொடருக்காக நானும் காத்திருக்கிறேன்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்