கட்டாய வெற்றி நெருக்கடியில் இந்திய அணி வங்காளதேசத்துடன் இன்று மோதல்
|இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு அடிலெய்டில் அரங்கேறும் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, வங்காளதேசத்துடன் (குரூப்2) மோதுகிறது.
அடிலெய்டு,
இந்தியா- வங்காளதேசம்
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர்12 சுற்று முக்கியமான கட்டத்தை நெருங்கியுள்ளது. தொடரில் இன்று (புதன்கிழமை) ஒரே நாளில் இரண்டு ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு அடிலெய்டில் அரங்கேறும் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, வங்காளதேசத்துடன் (குரூப்2) மோதுகிறது.
தனது தொடக்க ஆட்டத்தில் கடைசி பந்தில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி 2-வது ஆட்டத்தில் நெதர்லாந்தை புரட்டியெடுத்தது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் போராடி தோற்றது. தற்போது 4 புள்ளிகளுடன் உள்ள இந்திய அணி எஞ்சிய இரு ஆட்டங்களிலும் (வங்காளதேசம், ஜிம்பாப்வேக்கு எதிராக) வெற்றி பெற்றாக வேண்டும்.
இந்திய அணியில் டாப்-4 வீரர்களில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் குறைந்தது அரைசதம் அடித்து இருக்கின்றனர். ஆனால் லோகேஷ் ராகுல் (3 ஆட்டத்தில் 22 ரன்) மட்டும் தடுமாறிக்கொண்டிருக்கிறார். அவர் பார்முக்கு திரும்ப வேண்டியது அவசியமாகும். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 133 ரன்னில் அடங்கிய இந்திய அணி பீல்டிங்கில் சொதப்பியதால் கடைசி ஓவரில் வெற்றிக்கனியை நழுவ விட்டது.
வேகப்பந்து வீச்சுக்கு உகந்த அந்த ஆடுகளத்தில் சூர்யகுமாரின் ஷாட்டுகள் பிரமாதமாக இருந்தன. அதே சமயம் கோலி, ரோகித், பாண்ட்யா ஆகியோர் 'பவுன்சர்' பந்துகளில் அவசரகதியில் புல்ஷாட் அடித்து விக்கெட்டுகளை தாரை வார்த்தனர். பவுன்சர் பந்துகளை எதிர்கொள்வதில் இந்திய வீரர்கள் கூடுதல் கவனமுடன் இருக்க வேண்டியது முக்கியம்.
தினேஷ் கார்த்திக் ஆடுவாரா?
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் முதுகுவலியால் பாதியில் வெளியேறிய விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் இன்றைய ஆட்டத்தில் ஆடுவாரா? என்பதில் உறுதி இல்லை. இது குறித்து பேசிய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், 'எகிறி வந்த பந்தை துள்ளிகுதித்து பிடித்த போது அவருக்கு முதுகின் அடிப்பகுதியில் வலி ஏற்பட்டது. சிகிச்சைக்கு பிறகு இன்றைய தினம் (நேற்று) அவர் பயிற்சியில் ஈடுபட்டார். காயத்தன்மை நாளை (இன்று) எப்படி இருக்கிறது என்பதை பார்த்து அவரை ஆடும் லெவனில் சேர்ப்பது குறித்து முடிவு செய்வோம்' என்றார். தினேஷ் கார்த்திக் உடல்தகுதியை எட்டாவிட்டால் ரிஷப் பண்ட் களம் இறங்குவார்.
லோகேஷ் ராகுல் குறித்து பேசிய டிராவிட், 'ராகுலின் ஆட்டத்திறன் குறித்து கவலைப்படவில்லை. அவர் ஒரு அற்புதமான வீரர். சூப்பராக பேட்டிங் செய்யக்கூடியவர். பல சாதனை படைத்து இருக்கிறார். 20 ஓவர் கிரிக்கெட்டில் இது போன்று சரியாக ஆடாத ஆட்டங்கள் சில அமையத் தான் செய்யும். அது மட்டுமின்றி இந்த உலக கோப்பை தொடரில் டாப் வரிசையில் விளையாடுவது மிகவும் சவாலானது. அடுத்து வரும் ஆட்டங்களில் நிச்சயம் சிறப்பாக ஆடுவார் என்று நம்புகிறேன்' என்றார்.
ஷகிப் அல்-ஹசன் தத்துவம்
ஷகிப் அல்-ஹசன் தலைமையிலான வங்காளதேச அணி 2 வெற்றி (நெதர்லாந்து, ஜிம்பாப்வேக்கு எதிராக), ஒரு தோல்வியுடன் (தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக) 4 புள்ளிகள் பெற்று அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்கிறது. இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் என்றாலே வங்காளதேச வீரர்கள் வரிந்து கட்டி நிற்பார்கள். 2016-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் பெங்களூருவில் நடந்த இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றியின் விளிம்பில் இருந்த வங்காளதேசம் கடைசி 3 பந்தில் தடுமாறியதால் ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றியை கோட்டை விட்டது. உணர்வுபூர்வமான, திரில்லிங்கான அந்த ஆட்டத்தை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. இதே போல் இன்றைய ஆட்டத்திலும் குடைச்சல் கொடுக்க தீவிரமாக உள்ளனர். இதுவரை 8 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கும் வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அகமது, முஸ்தாபிஜூர் ரகுமான் ஆகியோர் ஆக்ரோஷத்தை காட்ட காத்திருக்கிறார்கள்.
இதையொட்டி வங்காளதேச கேப்டன் ஷகிப் அல்-ஹசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், 'இந்த ஆட்டத்தை பொறுத்தவரை இந்தியாவுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம். அவர்கள் உலக கோப்பையை வெல்ல இங்கு வந்திருக்கிறார்கள். ஆனால் நாங்கள் உலக கோப்பையை வெல்லக்கூடிய அணியாக இங்கு வரவில்லை. நிலைமையை உங்களால் புரிந்துகொள்ள முடியும். இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நாங்கள் வெற்றி பெற்றால், அது, அவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்கும். அதை செய்ய கடுமையாக முயற்சிப்போம். இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தானை வீழ்த்திய அயர்லாந்து, ஜிம்பாப்வே போன்ற ஒரு அணியாக எங்களை பார்க்கிறோம். அவர்களை போன்று நாங்களும் அதிர்ச்சி வைத்தியம் அளித்தால் மகிழ்ச்சியாக இருக்கும்' என்றார்.
மழை அச்சுறுத்தல்
சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 11 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 10-ல் இந்தியாவும், ஒன்றில் வங்காளதேசமும் வெற்றி பெற்றுள்ளன.
அடிலெய்டு ஆடுகளம் பொதுவாக பேட்டிங்குக்கு உகந்தது. அதனால் இங்கு ரன்மழையை எதிர்பார்க்கலாம். 2019-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக ஆஸ்திரேலியா 233 ரன்கள் குவித்ததே, இந்த மைதானத்தில் ஒரு அணியின் அதிகபட்சமாகும். இந்திய அணி இங்கு ஒரே ஒரு ஆட்டத்தில் ஆடியிருக்கிறது. 2016-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆடிய அந்த ஆட்டத்தில் இந்தியா 188 ரன்கள் சேர்த்து, அதன் மூலம் 33 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது நினைவு கூரத்தக்கது.
இந்த ஆட்டத்தின் போது மழை குறுக்கிட வாய்ப்புள்ளது. அடிலெய்டில் நேற்று மழை பெய்ததால் இந்திய வீரர்கள் உள்விளையாட்டு அரங்கில் பயிற்சி மேற்கொண்டனர். இன்றைய வானிலையை பொறுத்தவரை, மழை பெய்வதற்கு 60 சதவீதம் வாய்ப்புள்ளதாகவும், நாள் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அங்குள்ள வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிற்பகல் 1.30 மணிக்கு...
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக் அல்லது ரிஷப் பண்ட், அஸ்வின் அல்லது யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி, புவனேஷ்வர்குமார், அர்ஷ்தீப்சிங்.
வங்காளதேசம்: சவும்யா சர்கார், நஜ்முல் ஹூசைன் ஷன்டோ, லிட்டான் தாஸ், ஷகிப் அல்-ஹசன் (கேப்டன்), அபிப் ஹூசைன், நுருல் ஹசன், மொசாடெக் ஹூசைன், யாசிர் அலி, தஸ்கின் அகமது, முஸ்தாபிஜூர் ரகுமான், ஹசன் மமூத்.
பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
ஜிம்பாப்வே-நெதர்லாந்து
முன்னதாக இதே மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ஜிம்பாப்வே, நெதர்லாந்து அணிகள் சந்திக்கின்றன. நெதர்லாந்து ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. 3 புள்ளியுடன் லேசான வாய்ப்பில் தொங்கிக் கொண்டிருக்கும் ஜிம்பாப்வேக்கு இது வாழ்வா-சாவா? மோதலாகும்.
கோலி அறை வீடியோ விவகாரம்: டிராவிட் கருத்து
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி பெர்த்தில் தங்கியிருந்த ஓட்டல் அறைக்குள் ரகசியமாக நுழைந்த அந்த ஓட்டலின் ஊழியர் அவரது அறையை செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பரவவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த விராட் கோலி அது தனிமனித சுதந்திரத்தை பறிப்பது போன்ற செயல் என்று கண்டித்தார். இந்த விவகாரம் குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த டிராவிட், 'இது வருத்தம் அளிக்கக்கூடிய ஒரு செயல். பொதுமக்கள் மற்றும் ஊடகத்தினர் பார்வையில் இருந்து விலகி தனிமையையும், பாதுகாப்பையும் உணரக்கூடிய ஒரே இடம் ஓட்டல் அறை தான். அங்கும் அத்துமீறுவது சரியானது அல்ல. இந்த சம்பவத்தை கோலி எதிர்கொண்ட விதம் அருமை. அவர் இப்போது நன்றாக இருக்கிறார். பயிற்சி செய்கிறார்' என்றார்.