ரஞ்சி கிரிக்கெட்டில் ஆந்திராவுக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி 345 ரன்னில் 'ஆல்-அவுட்'
|ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆந்திராவுக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி 345 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது.
கோவை,
ரஞ்சி கிரிக்கெட்
38 அணிகள் பங்கேற்றுள்ள ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் தமிழக அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் (பி பிரிவு) ஆந்திராவுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் கோவை எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது.
இதில் முதல் இன்னிங்சில் ஆந்திரா 297 ரன்னில் ஆட்டம் இழந்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தமிழக அணி 2-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 273 ரன்கள் எடுத்து இருந்தது. வாஷிங்டன் சுந்தர் 7 ரன்னுடனும், விஜய் சங்கர் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.
3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய வாஷிங்டன் சுந்தர் 13 ரன்னிலும், விஜய் சங்கர் 26 ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர். முடிவில் தமிழக அணி 112.1 ஓவர்களில் 345 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. 48 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய ஆந்திரா நேற்றைய முடிவில் 53 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது. இன்று 4-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.
மும்பை இன்னிங்ஸ் வெற்றி
இதேபிரிவில் மும்பையில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் மும்பை-ஐதராபாத் அணிகள் சந்தித்தன. இதில் மும்பை அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 651 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஐதராபாத் அணி 2-வது நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 173 ரன்கள் எடுத்து இருந்தது. 3-வது நாளான நேற்று பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 65.1 ஓவர்களில் 214 ரன்னில் ஆல்-அவுட் ஆகி 'பாலோ-ஆன்' ஆனது. தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடிய ஐதராபாத் அணி 67.2 ஓவர்களில் 220 ரன்னில் எல்லா விக்கெட்டையும் பறிகொடுத்தது. இதனால் மும்பை அணி இன்னிங்ஸ் மற்றும் 217 ரன் வித்தியாசத்தில் மெகா வெற்றியை ருசித்தது.
புதுச்சேரி தோல்வி
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த 'சி' பிரிவு ஆட்டம் ஒன்றில் கர்நாடகாவுக்கு எதிராக 134 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய புதுச்சேரி 127 ரன்னில் சுருண்டது. இதனால் கர்நாடகா இன்னிங்ஸ் மற்றும் 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.