அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடர்: இரண்டு முன்னணி வீரர்களுக்கு ஓய்வு - வெளியான புதிய தகவல்...!
|அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் இரு முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி, அடுத்த மாதம் அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடுகிறது. வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டி20 தொடருக்கு ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கும் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியே அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்த்த வேளையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
அந்த தகவலின் படி அயர்லாந்துக்கு எதிரான தொடரில் ஹர்த்திக் பாண்ட்யா, சுப்மன் கில் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதிக பணிச்சுமை காரணமாக ஹர்த்திக் பாண்ட்யாவுக்கு ஓய்வு அளிக்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
மேலும் அவர் ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை போட்டிக்கு முழு உடல் தகுதியுடன் இருக்க கிரிக்கெட் வாரியம் விரும்புகிறது. அதே போல் சுப்மன் கில், கடந்த சில மாதங்களாக தொடர்ந்து விளையாடி வருவதால் அவருக்கும் ஓய்வு அளிக்கப்படலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
ஒருவேளை ஹர்த்திக் பாண்ட்யாவுக்கு அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டால் கேப்டனாக யார் செயல்படுவார் என கேள்வி எழுந்துள்ளது.
இது தொடர்பாக கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் கூறும் போது,
வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளுக்கு பிறகு ஹர்த்திக் பாண்ட்யா எப்படி உணர்கிறார் என்பதை பொறுத்து அணி தேர்வு அமையும். 50 ஓவர் உலக கோப்பையில் ஹர்த்திக் துணை கேப்டனாக செயல்பட உள்ளார் என்பதை மறந்து விடக்கூடாது என கூறியுள்ளன.