அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடர்: இந்திய அணிக்கு திரும்பும் முன்னணி வீரர்...?
|இந்திய அணி அடுத்த மாதம் அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா முதுகின் அடிப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கு பிறகு எந்தவித போட்டியிலும் ஆடவில்லை. இதனால் அவர் கடந்த ஆண்டு நடந்த ஆசிய கோப்பை, 20 ஓவர் உலக கோப்பை போட்டியை தவறவிட்டார்.
இதற்கிடையே பும்ராவுக்கு நியூசிலாந்தில் ஆபரேஷன் நடைபெற்றது. இதனால் அவர் நடந்து முடிந்த ஐ.பி.எல். தொடரிலும் ஆடவில்லை. ஜூன் மாதம் 7-ந் தேதி தொடங்கிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் பும்ரா இடம் பெறவில்லை.
இந்தியாவில் வருகிற அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக பும்ரா உடல் தகுதியை எட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்திய அணி அடுத்த மாதம் அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் ஆட உள்ளது. அந்த தொடரில் நீண்ட காலமாக அணியில் இடம் பெறாத பும்ரா இடம் பெறுவார் என தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.