டி20 உலகக்கோப்பை; இந்தியாவின் ஆடும் லெவனை அறிவித்த யுவராஜ் சிங்...விக்கெட் கீப்பர் யார் தெரியுமா..?
|டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவின் ஆடும் லெவனை முன்னாள் வீரரான யுவராஜ் சிங் அறிவித்துள்ளார்.
மும்பை,
20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 1ம் தேதி (இந்திய நேரப்படி 2ம் தேதி) தொடங்குகிறது. இந்த தொடர் இம்முறை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் கலந்து கொள்ள 20 அணிகளில் பாகிஸ்தானை தவிர மற்ற அணி நிர்வாகங்கள் தங்களது அணி விவரங்களை அறிவித்து விட்டன.
இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களம் இறங்குகிறது. இந்த அணியில் பேட்ஸ்மேன்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோரும், விக்கெட் கீப்பர்களாக ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சனும், ஆல் ரவுண்டர்களாக ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல் ஆகியோரும் இடம் பெறுள்ளனர்.
இந்த அணிக்கு பாண்ட்யா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணியின் தனது ஆடும் லெவனை இந்திய முன்னாள் வீரர் யுவராஜ் சிங் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஐ.சி.சி இணையத்தில் பேசியதாவது, கண்டிப்பாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்க வேண்டும் என்று நினைக்கிறேன். விராட் கோலி தம்முடைய 3வது இடத்தில் விளையாட வேண்டும். அதைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் ஆட வேண்டும்.
5வது இடத்தில் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனாக நான் ரிஷப் பண்ட்டை தேர்ந்தெடுப்பேன். அங்கே இடது வலது கை பேட்ஸ்மேன்கள் கலவையாக இருப்பதை நான் பார்க்க விரும்புகிறேன். ஏனெனில் 2 சேர்க்கை இருக்கும் போது எதிரணி சிறப்பாக பந்து வீசுவது கடினமாக இருக்கும். சஞ்சு பார்மில் இருந்தாலும் பண்ட் இடது கை பேட்ஸ்மேன். கடந்த காலங்களைப் போல இந்தியாவுக்காக வெற்றிகளை பெற்றுக் கொடுக்கும் திறமை அவரிடம் இருப்பதாக நம்புகிறேன். அதைத் தொடர்ந்து ஹர்திக் பாண்ட்யா களம் இறங்க வேண்டும். ஐ.பி.எல் தொடரில் சுமாராக செயல்பட்டாலும் பாண்ட்யா உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறேன்.
அவரைத் தொடர்ந்து இந்தியாவுக்காக கடைசி டி20 தொடரில் அசத்திய ஷிவம் துபே.அவர் ஐ.பி.எல் தொடரிலும் நன்றாக செயல்பட்டுள்ளார். மிடில் ஆர்டரில் அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று நம்புகிறேன். ஸ்பின்னராக யுஸ்வேந்திர சஹால் தற்போது நன்றாக பந்து வீசுவதால் அணியில் இருக்க வேண்டும். இதைத்தொடர்ந்து வேகப்பந்து வீச்சாளர்களாக ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இருப்பார்கள். இந்த அணி வலுவாகவும், நிரூபிக்கக் கூடியதாகவும் இருக்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.