டி20 உலகக்கோப்பை: அரையிறுதிக்கு செல்லப்போவது யார்? - சிக்கலில் புள்ளிப்பட்டியல்
|டி20 உலகக்கோப்பை தொடரின் குரூப் ஒன் பிரிவில் நியூசிலாந்தும், குரூப் 2 பிரிவில் இந்தியாவும் முதலிடத்தில் உள்ளன.
மெல்போர்ன்,
டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.
ஆனால் ஒருசில போட்டிகள் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. போட்டிகள் முழுமையாக நடைபெறாமல் மழையால் ரத்து செய்யப்படுவதால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்படுகிறது. இந்த ஒரு புள்ளியானது புள்ளிப்பட்டியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
மேலும், மழையால் போட்டிகள் நிற்பது இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வலுவான அணிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அயர்லாந்து, ஜிம்பாப்வே போன்ற அணிகளும் வலுவான அணிகளுக்கு சவால் கொடுக்கும் வகையில் விளையாடி வருவதால், அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான புள்ளிப்பட்டியல் சிக்கலில் உள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரின் குரூப் ஒன் பிரிவு புள்ளிப்பட்டியலில் 5 புள்ளிகளுடன் நியூசிலாந்து முதலிடத்தில் நீடிக்கிறது. இங்கிலாந்து, அயர்லாந்து, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
குரூப் 2 பிரிவில் 4 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.