டி20 உலகக்கோப்பை : கில் , ஜெய்ஸ்வால் ஆகியோரில் யார் விளையாட வேண்டும்..? முன்னாள் வீரர்கள் தேர்வு
|இந்திய அணியில் ரோகித்துடன் மற்றொரு தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவதற்கு சுப்மன் கில் - ஜெய்ஸ்வால் இடையே போட்டி காணப்படுகிறது.
புதுடெல்லி,
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் 1-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடைபெற உள்ளது. கடைசியாக 2007-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. அதன் பின் கடந்த 17 வருடங்களாக டி20 உலகக்கோப்பையை வெல்ல முடியாமல் இந்தியா திணறி வருகிறது.
இதற்கான இந்திய அணி இந்த மாத இறுதியில் தேர்வு செய்யப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. இந்திய அணிக்காக விளையாடப் போகும் வீரர்கள் யார்? யார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. இம்முறை ரோகித் சர்மா தலைமையில் களமிறங்க உள்ள இந்திய அணியில் ஐ.பி.எல். தொடரில் சிறப்பாக விளையாடி நல்ல பார்மில் உள்ள வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அது போன்ற சூழ்நிலையில் இந்திய அணியின் துவக்க வீரராக கேப்டன் ரோகித் சர்மா களமிறங்குவது உறுதியாகியுள்ளது. அவருடன் 2-வது தொடக்க வீரராக களமிறங்குவதற்கு சுப்மன் கில் - யசஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரிடையே போட்டி காணப்படுகிறது.
அதில் கடந்த ஐ.பி.எல். தொடரில் அதிவேகமான அரை சதமடித்து 625 ரன்கள் குவித்து மிரட்டிய ஜெய்ஸ்வால் இந்தியாவுக்காகவும் அறிமுகமாகி அபாரமாக செயல்பட்டார். இருப்பினும் இந்த ஐ.பி.எல். தொடரில் அவர் ராஜஸ்தான் அணிக்காக சற்று தடுமாற்றமாக செயல்பட்டு வருகிறார். மறுபுறம் சுப்மன் கில் இம்முறை குஜராத் அணியின் கேப்டனாக ஓரளவு நன்றாக விளையாடி வருகிறார்.
இந்நிலையில் இந்த 2 வீரர்களில் சுப்மன் கில் கண்டிப்பாக உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்று இந்திய முன்னாள் வீரரான ஜாகீர் கான் கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:-
"கண்டிப்பாக தேர்வு குழுவுக்கு பெரிய சிரமம் இருக்கும். ஏனெனில் எந்த அணியை நீங்கள் பார்த்தாலும் டாப் ஆர்டரில் விளையாடுவதற்கு நிறைய வீரர்கள் இருப்பார்கள். எனவே தேர்வாளர்கள் எந்த கோணத்தில் செல்கிறார்கள் என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஆனால் நீங்கள் என்னை கேட்டால் சுப்மன் கில் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று நான் சொல்வேன்.
ஜெய்ஸ்வாலுடன் போட்டி என்று வரும்போது கில் கண்டிப்பாக இருக்க வேண்டும். ஏற்கனவே இந்தியா ரோகித்தை தங்களுடைய கேப்டனாக அறிவித்துள்ளது. எனவே அவருடன் விளையாடப்போவது யார்? என்பதை நீங்கள் பார்க்க வேண்டும்" என்று கூறினார்.
அதே நிகழ்ச்சியில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் இயான் மோர்கன் பேசியது பின்வருமாறு:- "இங்கு மட்டுமல்ல உலகம் முழுவதிலும் விளையாடுவதற்கு சுப்மன் கில் அற்புதமான வீரர். பிளேயிங் லெவனில் அவர் இருக்க வேண்டும். இந்திய அணியின் 6 -7 பேட்ஸ்மேன்களில் அவருக்கும் ஜெய்ஸ்வாலுக்கும் போட்டி இருக்கும். ஆனால் விராட் கோலிக்கு எதிராக போட்டி இருக்காது. ஏனெனில் விராட் கோலி ஏற்கனவே அணியில் இருப்பார்" என்று கூறினார்.