டி20 உலகக்கோப்பை: சாம்சன், ராகுல், பண்ட் ஆகியோரில் யார் விளையாட வேண்டும்..? மஞ்ச்ரேக்கர் தேர்வு
|டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் இடத்திற்கு கடுமையான போட்டி நிலவுகிறது.
மும்பை,
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் 20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது.
இந்த தொடர் ஜூன் 1ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது. இந்த உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிக்க நடப்பு ஐ.பி.எல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இந்திய வீரர்கள் உள்ளனர்.
இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் இடத்திற்கு கடுமையான போட்டி நிலவுகிறது. இதுவரை அந்த இடத்திற்கு சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட், இஷான் கிஷன், கே.எல்.ராகுல், ஜித்தேஷ் சர்மா, துருவ் ஜூரெல் ஆகியோர் போட்டியிட்டு வந்த நிலையில் தற்போது அந்த வரிசையில் தினேஷ் கார்த்திக்கும் இணைந்துள்ளார்.
நடப்பு சீசனில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் தினேஷ் கார்த்திக்கை அவரது அதிரடி ஆட்டத்திற்காக மட்டுமின்றி அவரது அனுபவத்திற்காகவும் டி20 உலகக்கோப்பைக்கான அணியில் எடுக்க வேண்டும் என பல முன்னாள் வீரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
அதில் ஏற்கனவே கடந்த உலகக்கோப்பையில் சுமாராக விளையாடியதால் தினேஷ் கார்த்திக் மீண்டும் இந்தியாவுக்காக தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. அதேபோல இஷான் கிஷன், ஜித்தேஷ் சர்மா ஆகியோர் தொடர்ச்சியாக பெரிய ரன்கள் அடிக்க தவறுவதால் உலகக்கோப்பையில் இடம் கிடைக்காது என்றே தெரிகிறது.
சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தேர்வு:
இருப்பினும் கே.எல். ராகுல், சஞ்சு சாம்சன் ஆகியோர் லக்னோ மற்றும் ராஜஸ்தான் அணிக்காக சிறப்பாக விளையாடி நல்ல ரன்கள் குவித்துள்ளனர். அதே போல காயத்திலிருந்து குணமடைந்துள்ள ரிஷப் பண்ட் டெல்லி அணிக்காக அபாரமாக விளையாடி இதுவரை 2 ஆட்டநாயகன் விருதுகளை வென்று மேட்ச் வின்னராக செயல்பட்டு வருகிறார். அதனால் இந்திய அணியில் விக்கெட் கீப்பர் இடத்தை பிடிக்க இந்த 3 வீரர்களிடையே உண்மையான போட்டி காணப்படுகிறது.
இந்நிலையில் கே.எல். ராகுல், சஞ்சு சாம்சனை விட ரிஷப் பண்ட்தான் டி20 உலகக்கோப்பையில் விளையாட வேண்டும் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார். ஏனெனில் நாக் அவுட் போன்ற அழுத்தமான போட்டியில் 60 பந்தில் சதமடித்து எதிரணியிடமிருந்து வெற்றியை பறிக்கும் திறமையை ரிஷப் பண்ட் கொண்டிருப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.
"தற்போது போட்டிக்கு நிறைய வீரர்கள் இருப்பதாலேயே நாம் இதைப்பற்றி விவாதிக்கிறோம். சஞ்சு சாம்சன், கே.எல். ராகுல் ஆகியோர் சுவாரசியமான தேர்வுகள். ஆனால் ரிஷப் பண்ட்டிடம் ஒரு விஷயம் இருக்கிறது. அதனால் அவரை நான் 15 பேர் கொண்ட அணியில் தேர்ந்தெடுத்து உலகக்கோப்பை செமி பைனல் போன்ற பெரிய அழுத்தமான போட்டியின் பிளேயிங் லெவனிலும் தேர்ந்தெடுப்பேன்.
இந்த பையனால் அது போன்ற போட்டியில் 60 பந்துகளில் சதமடித்து வெற்றியை பெற்றுக் கொடுக்க முடியும். தற்போதைய இந்திய அணியில் அது போன்ற வீரர்கள் அதிகமாக இல்லை. சமீப காலங்களாக பைனல் போன்ற பெரிய போட்டிகளில் இந்தியா அசத்துவதில்லை. ஆனால் அந்த அழுத்தமான போட்டிகளில்தான் ரிஷப் பண்ட் போன்றவர் இன்னும் அதிகமாக அசத்தக்கூடியவர். அந்த அழுத்தமான சூழ்நிலைகளில் அவர் ரிலாக்சாக விளையாடக்கூடியவர்" என்று கூறினார்.