டி20 உலகக்கோப்பை; இந்தியாவின் முதன்மை விக்கெட் கீப்பர் யார்..? - கவுதம் கம்பீர் அளித்த பதில்
|20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 1ம் தேதி தொடங்குகிறது.
கொல்கத்தா,
20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 1ம் தேதி (இந்திய நேரப்படி 2ம் தேதி) தொடங்குகிறது. இந்த தொடர் இம்முறை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் கலந்து கொள்ள 20 அணிகளில் பாகிஸ்தானை தவிர மற்ற அணி நிர்வாகங்கள் தங்களது அணி விவரங்களை அறிவித்து விட்டன.
இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களம் இறங்குகிறது. இந்த அணியில் பேட்ஸ்மேன்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோரும், விக்கெட் கீப்பர்களாக ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சனும், ஆல் ரவுண்டர்களாக ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல் ஆகியோரும் இடம் பெறுள்ளனர்.
இந்த அணிக்கு பாண்ட்யா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் விக்கெட் கீப்பராக விளையாடப் போவது யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. நடப்பு ஐ.பி.எல் தொடரில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவது கடினம் தான். மேலும் ரிஷப் பண்ட் இந்த தொடரில் 13 போட்டிகளில் 446 ரன்கள் எடுத்துள்ளார். அதேவேளையில் சஞ்சு சாம்சன் இதுவரை 12 போட்டிகளில் ஆடி 486 ரன்கள் எடுத்துள்ளார்.
இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் விக்கெட் கீப்பராக யார் விளையாட வேண்டும் என்ற கேள்விக்கு இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது,
ஐ.பி.எல் தொடரில் சஞ்சு சாம்சன் டாப் ஆர்டரில் விளையாடும் நிலையில் ரிஷப் பண்ட் மிடில் ஆர்டரில் விளையாடுகிறார். இடது கை வீரரான ரிஷப் பண்ட் மிடில் ஆர்டரில் வித்தியாசத்தை கொண்டு வருவார். இந்திய அணியின் சேர்க்கையை பார்க்கும் போது நமக்கு டாப் ஆர்டரை விட மிடில் ஆர்டரில் விளையாடக்கூடிய விக்கெட் கீப்பர் தேவை.
ஆனால் 6, 7 ஆகிய இடங்களில் சஞ்சு சாம்சனால் ரன்கள் அடிக்க முடியும் என்று இந்திய அணி கருதினால் அவரை தேர்ந்தெடுக்கலாம். அதே சமயம் யார் விளையாடினாலும் அவர்களுக்கு நாம் முழு ஆதரவை கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.