டி20 உலகக் கோப்பை: மழையால் அரையிறுதி கைவிடப்பட்டால் இந்திய அணி இறுதி போட்டிக்கு செல்லுமா?
|நாக் அவுட் சுற்றில் போட்டியின் முடிவை எட்ட இரு அணிகளும் குறைந்தது தலா 10 ஓவர்கள் விளையாட வேண்டும்.
அடிலெய்டு,
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்றில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை பிடித்து அரை இறுதிக்குள் நுழைந்தது. இதையடுத்து இந்திய அணி அடிலெய்டில் வரும் நவம்பர் 10ம் தேதியன்று அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது.
இதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக நாளை நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த நிலையில் உலகக் கோப்பைக்கான நாக் அவுட் சுற்றுக்கான விதிகளை ஐசிசி வெளியிட்டுள்ளது. அந்த வகையில் மழையால் அரையிறுதி ஆட்டம் நடைபெறாமல் பாதிக்கப்பட்டாலும், கைவிடப்பட்டாலும் எந்த அணிக்கு சாதகம் என்பதை பார்க்கலாம்.
ஐசிசி அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி இரண்டிற்கும் ரிசர்வ் நாளை வைத்துள்ளது. நவம்பர் 9ஆம் தேதி முதல் அரையிறுதிப் போட்டி நடைபெற உள்ளது. மழையால் இந்த ஆட்டம் பாதிக்கப்பட்டால், இரண்டாம் நாள் (நவம்பர் 10) ஆட்டம் நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து தொடங்கும். இதே போல் 2-வது அரையிறுதி போட்டியின் ரிசர்வ் நாள் நவம்பர் 11-ஆம் தேதி.
மழை காரணமாக இரண்டாவது நாளிலும் ஆட்டத்தை முடிக்க முடியாவிட்டால், புள்ளிப்பட்டியலில் முதலிடம் வகிக்கும் அணி இறுதிப் போட்டிக்கு வரும். அத்தகைய சூழ்நிலையில், இந்தியா மற்றும் நியூசிலாந்து பலன் பெறும். நியூசிலாந்து அணி 7 புள்ளிகளுடன் குரூப்-1ல் முதலிடத்திலும், இந்திய அணி 8 புள்ளிகளுடன் குரூப்-2ல் முதலிடத்திலும் உள்ளன.
ஐசிசி விதியின்படி, குரூப் சுற்றில் போட்டியின் முடிவுக்காக இரு அணிகளும் குறைந்தது தலா 5 ஓவர்கள் பேட் செய்வது அவசியம். ஆனால் நாக் அவுட் சுற்றில் போட்டியின் முடிவை எட்ட இரு அணிகளும் குறைந்தது தலா 10 ஓவர்கள் விளையாட வேண்டும்.
உலகக்கோப்பை இறுதிப் போட்டி நவம்பர் 13ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த போட்டியின் ரிசர்வ் தினமாக நவம்பர் 14 அறிவிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக இறுதிப் போட்டி கைவிடப்பட்டால் போட்டி டிரா என அறிவிக்கப்படும். ஐசிசியின் விதிமுறைப்படி இரு அணிளும் வெற்றியாளராக அறிவிக்கப்படுவர். கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியா- நியூசிலாந்து இடையிலான உலகக் கோப்பை அரையிறுதியில் ரிசர்வ் நாளில் போட்டி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.