டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் பலம், பலவீனம் என்ன? ஒரு பார்வை
|டி20 உலகக்கோப்பை தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
சென்னை,
20 அணிகள் கலந்துகொள்ள உள்ள 9-வது உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. இதில் இந்திய அணி 'ஏ' பிரிவில் பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் வரும் ஜூன் 5-ந்தேதி அயர்லாந்துடன் நியூயார்க் நகரில் மோதுகிறது.
இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர், கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷாவுடன் கலந்து ஆலோசித்த பிறகு அணி பட்டியல் வெளியிடப்பட்டது. கேப்டனாக ரோகித் சர்மா நீடிக்கும் நிலையில், துணை கேப்டன் பொறுப்பு ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் கொஞ்சம் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். எனவே ஸ்லோவான பிட்சுகளைக் கொண்ட வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் 2024 டி20 உலகக்கோப்பையில் அவரை தேர்வுக் குழு கழற்றி விட முடிவெடுத்துள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்தன. ஆனால் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ள இந்திய அணி நிர்வாகம் விராட் கோலியை அணியில் சேர்த்துள்ளது.
டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்:
இந்திய அணியின் டாப் ஆர்டரில் எதிர்பார்த்ததை போலவே ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஆகியோரே இடம்பெற்றுள்ளனர். இதில் ரோகித் மற்றும் விராட் கோலியின் அனுபவம் இந்திய அணிக்கு நிச்சயம் கை கொடுக்கும். எனவே இந்திய அணியின் டாப் ஆர்டர் வலுவாகவே உள்ளது. இவர்களில் ஒருவர் நிலைத்து நின்றாலும் இந்திய அணி நிச்சயம் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமில்லை.
இளம் அதிரடி பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்வால் ஐ.பி.எல்.-ல் மந்தமாக தொடங்கினாலும், இப்போது பார்முக்கு வந்து விட்டார். அவரது திறமை மீது நம்பிக்கை வைத்துள்ள தேர்வு குழு வாய்ப்பு அளித்துள்ளது.
மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்:
இந்திய அணியின் மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன் ஆகியோர் தேர்வாகியுள்ளனர். இவர்களில் சூர்யகுமார் யாதவ் டி20 போட்டிகளில் தொடர்ந்து அசத்தி வருகிறார்.
மறுபுறம் மிகப்பெரிய விபத்திலிருந்து மீண்டு வந்துள்ள ரிஷப் பண்ட் நடப்பு ஐ.பி.எல். சீசனில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். 2-வது விக்கெட் கீப்பராக அணியில் சேர்க்கப்பட்டுள்ள சஞ்சு சாம்சனும் சிறப்பாகவே செயல்படுகிறார். எனவே விக்கெட் கீப்பராக இருவரில் யாரை அணியின் பிளேயிங் 11-ல் சேர்த்தாலும் அணிக்கு வலுவானதாகவே அமையும்.
ஆல் ரவுண்டர்கள்:
இந்திய அணியில் ஆல் ரவுண்டர்களில் ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, ஜடேஜா மற்றும் அக்சர் படேல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள பாண்ட்யா நடப்பு ஐ.பி.எல். சீசனில் பெரிய அளவில் செயல்பாடுகளை வெளிப்படுத்தவில்லை. மும்பை அணியின் கேப்டனாக செயல்பட்ட போதிலும் பந்து வீச்சிலோ அல்லது பேட்டிங்கிலோ எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஒருவேளை இவர் அசத்தும் பட்சத்தில் அது நிச்சயம் இந்திய அணிக்கு வலு சேர்க்கும்.
மறுபுறம் சென்னை அணியின் மிடில் ஆர்டரில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஷிவம் துபே உலகக்கோப்பையிலும் அசத்தினால் இந்திய அணி மிடில் ஆர்டரில் நிறைய ரன்களை குவிக்கும். இருப்பினும் ஆல் ரவுண்டரான இவர் சென்னை அணியில் இம்பேக்ட் வீரராகவே விளையாடி வருகிறார். இது பந்து வீச்சில் அவருக்கு பின்னடைவை கொடுக்கிறது. மறுபுறம் ஜடேஜா மற்றும் அக்சர் படேல் இந்திய அணியில் நீண்ட காலமாகவே விளையாடி வருகின்றனர். ஆனால் இருவரில் ஒருவருக்கு மட்டுமே அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பினிஷிங் ரோல் இடத்தில் இவர்களின் பங்களிப்பையே இந்திய அணி சார்ந்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இந்திய அணியில் நீண்ட காலமாக பினிஷிங் ரோலில் விளையாடி வந்த ரிங்கு சிங் ரிசர்வ் வீரராக மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சுழற்பந்து வீச்சு:
இந்திய அணியில் சுழற்பந்து வீச்சை பொறுத்தவரை மணிக்கட்டை பயன்படுத்தி வீசும் குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். நடப்பு ஐ.பி.எல். சீசனில் இருவரும் சிறப்பாகவே விளையாடி வருகின்றனர்.
இருப்பினும் சர்வதேச கிரிக்கெட்டை பொறுத்த வரை குல்தீப் மட்டுமே நீண்ட காலமாக விளையாடி வருகிறார். சாஹல் நீண்ட காலம் கழித்து அணியில் இடம் பிடித்துள்ளார்.
ஆல் ரவுண்டர்கள் ஸ்பின்னர்களான ஜடேஜா, அக்சர் உடன் இவர்களும் அணியில் உள்ளனர். எனவே 4 ஸ்பின்னர்கள் அணியில் தேவையா? என்பது பலரின் கேள்வியாக உள்ளது. இதில் ஒருவருக்கு பதிலாக ரிங்கு சிங்கை அணியில் சேர்த்திருக்கலாம் என்று கருத்துகள் எழும்பி உள்ளன.
வேகப்பந்து வீச்சாளர்கள்:
இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா, சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய 3 பிரதான வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். இதில் பும்ரா தொடர்ந்து தனது அபார பந்து வீச்சை வெளிப்படுத்தி வருகிறார். ஆனால் மறுபுறம் சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் இந்திய அணியில் அசத்தி வந்தபோதிலும் தற்சமயம் சிறப்பாக செயல்பட தவறிவருகின்றனர். எனவே அவர்களில் ஒருவருக்கு பதிலாக நடராஜனை அணியில் சேர்த்திருக்கலாம் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ரிசர்வ் வீரர்கள்:
சுப்மன் கில்லுக்கு பிரதான அணியில் இடமில்லை. ரிசர்வ் வீரர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இதே போல் ஆட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்யும் பணியை செய்யக்கூடிய இடக்கை பேட்ஸ்மேன் ரிங்கு சிங்குக்கு அதிர்ஷ்டம் இல்லை. ஐ.பி.எல்.-ல் 'இம்பேக்ட்' விதிமுறையால் அவருக்கு கொல்கத்தா அணியில் களம் காண அதிகமான வாய்ப்பு கிடைக்கவில்லை. இதுவே அவருக்கு அணித் தேர்வில் பின்னடைவை ஏற்படுத்தி விட்டதாக இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். என்றாலும் அவர் மாற்று வீரராக உள்ளார்.
மேலும் கலீல் அகமது மற்றும் ஆவேஷ் கான் ஆகிய 2 அனுபவமில்லாத வேகப்பந்து வீச்சாளர்களும் ரிசர்வ் லிஸ்ட்டில் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய அணி பின்வருமாறு:-
ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப்சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.
ரிசர்வ் வீரர்கள்: சுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அகமது, அவேஷ்கான்.