டி20 உலகக்கோப்பை: விராட், பும்ரா அல்ல..அவர்தான் வெற்றிக்கு காரணம் - கிரெக் சேப்பல்
|டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு சேப்பல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
சிட்னி,
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் தோல்வியே சந்திக்காமல் வெற்றி நடை போட்ட இந்தியா இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றதுது. அதனால் 17 வருடங்கள் கழித்து இந்தியா டி20 உலகக்கோப்பையை வென்றது.
இந்த வெற்றிக்கு தொடர் முழுவதும் அதிரடியாக விளையாட வேண்டும் என்ற எண்ணத்தை இந்திய அணியில் கொண்டு வந்து அதை செய்தும் காட்டிய ரோகித் சர்மா பலராலும் பாராட்டப்பட்டு வருகிறார். அதேபோல தொடர் முழுவதும் தடுமாறினாலும் இறுதிப்போட்டியில் 76 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருது வென்ற விராட் கோலியும் முக்கிய பங்காற்றினார். அத்துடன் ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்ட அனைத்து வீரர்களுமே வெற்றியில் முக்கிய பங்காற்றினர்.
இந்நிலையில் பயிற்சியாளர் ரகுல் டிராவிட் தான் இந்தியாவின் வரலாற்று வெற்றிக்கான திட்டங்களுக்கு முக்கிய காரணமாக இருந்திருப்பார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கிரேக் சேப்பல் பாராட்டியுள்ளார். எனவே அவருக்காக தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாக தெரிவிக்கும் கிரேக் சேப்பல் இது குறித்து பேசியது பின்வருமாறு:-
"டி20 உலகக்கோப்பையை வென்றதற்காக இந்தியாவுக்கு வாழ்த்துகள். குறிப்பாக ராகுல் டிராவிட் இந்த வெற்றியின் ஒரு பகுதியாக இருந்ததற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்திய கிரிக்கெட்டின் மீதான அவரது ஆர்வம் எப்போதும் தெளிவாகத் தெரியும். எனவே அவர் இந்த வெற்றிக்கான திட்டத்தின் முக்கிய பகுதியாக இருந்திருப்பார். அதனால் இந்த வெற்றி அவருக்கு திருப்திகரமாக இருந்திருக்கும். இந்திய அணியில் உலகக்கோப்பையுடன் தன்னுடைய நேரத்தை அவர் முடித்ததை பார்ப்பது அற்புதமாக இருக்கிறது" என்று கூறினார்.