< Back
கிரிக்கெட்
டி20 உலகக்கோப்பை: விராட் கோலியின் தடுமாற்றத்திற்கு காரணம் இதுதான் - ஆகாஷ் சோப்ரா கருத்து
கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை: விராட் கோலியின் தடுமாற்றத்திற்கு காரணம் இதுதான் - ஆகாஷ் சோப்ரா கருத்து

தினத்தந்தி
|
23 Jun 2024 11:30 AM IST

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி தடுமாற்றத்துடனே பேட்டிங் செய்து வருகிறார்.

மும்பை,

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்று கம்பீரமாக வலம் வருகிறது. ஏற்கனவே சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் 2 வெற்றிகள் பெற்று அரையிறுதி வாய்ப்பை ஏறக்குறைய உறுதி செய்துள்ள இந்திய அணி, தனது 3-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை நாளை எதிர்கொள்ள உள்ளது.

முன்னதாக ஐசிசி தொடர்களில் அபாரமாக விளையாடி வரும் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி நடப்பு டி20 உலகக்கோப்பையில் தடுமாற்றமாக செயல்பட்டு வருகிறார். 5 ஆட்டங்களில் பேட்டிங் செய்து இதுவரை ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.

பேட்டிங் வரிசையில் 3-வது வீரராக களமிறங்கி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அவர் இந்த உலகக்கோப்பை தொடரில் தொடக்க வீரராக விளையாடி வருகிறார். இப்படி துவக்க வீரராக களமிறங்கி விளையாடி வரும் இவ்வேளையில்தான் அவர் தடுமாற்றத்தை சந்தித்து வருகிறார்.

வங்காளதேச அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் 37 ரன்கள் அடித்தார். இருப்பினும் தன்னுடைய விக்கெட்டை எளிதாக இழந்து வெளியேறினார். இந்த போட்டியிலும் அவர் 1 பவுண்டரி 3 சிக்சர்கள் என அதிரடி காட்டி இருந்தாலும் தன்னுடைய பாணியை மாற்றிக்கொண்டு ஆக்ரோஷமாக விளையாட விரும்பியதால் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இந்நிலையில் அவரது இந்த அணுகுமுறைதான் அவரை பெரிய ஸ்கோரை அடிக்க விடாமல் செய்து வருவதாக இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "விராட் கோலியால் பெரிய ஸ்கோர் அடிக்க முடியாமல் போனதற்கு காரணம் அமெரிக்க ஆடுகளங்கள் தான். அந்த ஆடுகளங்களில் பேட்டிங் செய்யும்போது அவருக்கு சிரமம் இருந்தது.

அதேபோன்று தனது பாணியை மாற்றிக்கொண்டு ஆக்ரோஷமாக விளையாட வேண்டும் என்று அவர் தற்போது விளையாடி வருகிறார். அப்படி விளையாடுவதுதான் அவருடைய கூர்மையான ஆட்டத்தை இழந்து அவரால் பெரிய ஸ்கோர் அடிக்க முடியாமல் போகிறது. இந்த அணுகுமுறையை மாற்றிக்கொண்டு வழக்கம் போல் சிறிது நேரம் களத்தில் நின்று அதன் பின்னர் அதிரடியாக விளையாடினால் அவரால் பெரிய ஸ்கோர் அடிக்க முடியும்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்