டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்தை வீழ்த்திய என்னுடைய திட்டம் இதுதான் - ஆட்ட நாயகன் அக்சர் படேல்
|இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் அக்சர் படேல் ஆட்ட நாயகன் விருது வென்று அசத்தினார்.
கயானா,
கடந்த 1-ம் தேதி தொடங்கிய 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இன்னும் இறுதிப்போட்டி மட்டுமே எஞ்சியுள்ளது. இறுதிப்போட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
இதில் நேற்று நடைபெற்ற 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் 68 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.
அதன்படி கயானா நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 171 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் 57 ரன்கள் குவித்தார். இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக கிறிஸ் ஜோர்டன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து, இந்திய அணியின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 103 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக ஹாரி புரூக் 25 ரன்கள் அடித்தார். இந்திய அணியில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் மற்றும் அக்சர் படேல் தலா 3 விக்கெட்டுகளும், பும்ரா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.
இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய அக்சர் படேல் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் ஸ்லோவாக இருந்த பிட்ச்சில் தாமும் மெதுவாக பந்து வீசியதாக அக்சர் படேல் தெரிவித்துள்ளார். ஒருவேளை வேகமாக வீசியிருந்தால் தம்மை பேட்ஸ்மேன்கள் அடித்து நொறுக்கியிருப்பார்கள் என்று தெரிவிக்கும் அவர் ஏற்கனவே பவர் பிளே ஓவர்களில் வீசிய அனுபவம் கை கொடுத்ததாக கூறியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "கடந்த காலங்களிலும் நான் பவர்பிளேவில் பந்து வீசியுள்ளேன். எனவே இன்று (அதாவது நேற்று) பவர் பிளேவில் வீச வேண்டும் என்பதே திட்டமாகும். நான் சரியான ஏரியாவில் பந்து வீச முயற்சித்தேன். அது எனக்கு வேலை செய்தது. ஒருவேளை வேகமாக வீசியிருந்தால் அது வேலை செய்திருக்காது. பேட்ஸ்மேன்களுக்கு எளிதாக மாறியிருக்கும்.
இந்த பிட்ச் எளிதாக இல்லை என்பதால் 160 ரன்கள் அடித்தாலே நல்ல இலக்கு அமைக்கலாம் என்று எங்களுடைய பேட்ஸ்மேன்கள் சொன்னார்கள். ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் ஆகியோர் அற்புதமான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அவர்கள் முக்கிய நேரத்தில் பவுண்டரிகள் அடித்து ஸ்ட்ரைக்கை மாற்றினர். தற்போதைய நிலைமையில் பார்படாஸ் நகரில் நடைபெறும் இறுதிப்போட்டி பற்றி நினைக்கவில்லை. இந்த ஆட்டநாயகன் விருதை கொண்டாடுவேன்" என்று கூறினார்.