டி 20 உலகக்கோப்பை; இந்தியாவின் டாப் 3 பேட்ஸ்மேன்கள் இவர்கள் தான் - இர்பான் பதான் தேர்வு செய்த வீரர்கள்
|ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது.
மும்பை,
10 அணிகள் கலந்து கொண்டுள்ள ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.
இந்த ஐ.பி.எல் தொடர் நிறைவடைந்ததும் வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற இந்திய வீரர்கள் நடப்பு ஐ.பி.எல் தொடரில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடரை முன்னிட்டு அந்த தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற வேண்டிய வீரர்கள் குறித்து பல இந்திய முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய முன்னாள் வீரரான இர்பான் பதான் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் டாப் 3 பேட்ஸ்மேன்களை (பிளேயிங் லெவனில்) தேர்வு செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில், தற்போது உலகக் கோப்பை நெருங்கி வருகிறது. எனவே இந்திய அணியின் டாப் 3 வீரர்களுக்கான (பேட்ஸ்மேன்கள்) என்னுடைய தேர்வு.
முதலாவதாக கேப்டனான ரோகித் சர்மா. அவருடன் மற்றொரு தொடக்க வீரராக யஷஸ்வி ஜெய்ஸ்வால். அவர் கண்டிப்பாக தொடக்க வீரராக இருக்க வேண்டும். ஏனெனில் ஐ.பி.எல்-க்கு முன்பு அவர் இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்டுள்ளார்.
3வது இடத்தில் சந்தேகத்திற்கு இடமின்றி விராட் கோலி. அவரது இடம் அல்லது ஸ்டிரைக் ரேட் குறித்து எந்த கேள்வியும் இருக்கக்கூடாது. சர்வதேச டி20-ல் அவரது ஸ்ட்ரைக் ரேட் 138 -க்கும் அதிகம். இது கிறிஸ்கெயிலை விட அதிகம். அவரது சராசரி 51-க்கும் அதிகம். அவரது ஸ்ட்ரைக் ரேட் இந்த சீசனில் 150. எனவே அவர் கண்டிப்பாக அணியில் இடம் பெற வேண்டும். உங்கள் கருத்துகள் என்ன..?. இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.