டி20 உலகக்கோப்பை; 2வது அரையிறுதிக்கு ரிசர்வ் நாள் கிடையாது...காரணம் என்ன...?
|20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
துபாய்,
20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் கலந்து கொள்ள உள்ள பாகிஸ்தானை தவிர மற்ற அனைத்து அணி நிர்வாகங்களும் தங்களது அணியை அறிவித்து விட்டன.
இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்ட்யா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். விக்கெட் கீப்பர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இந்திய அணியில் விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரீத் பும்ரா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட வீரர்கள் இடம் பெற்றுள்ளன. இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் ஜூன் 17ம் தேதி நிறைவடைகிறது. அதன் பின்னர் ஜூன் 19ம் தேதி தொடங்கும் சூப்பர் 8 சுற்று ஜூன் 24ம் தேதி நிறைவடைகிறது.
இந்த தொடரின் முதலாவது அரையிறுதி பிரையன் லாரா மைதானத்தில் ஜூன் 26 (இந்திய நேரப்படி ஜூன் 27) காலை 6 மணிக்கும், 2வது அரையிறுதி கயானா பிராவிடன்ஸ் மைதானத்தில் ஜூன் 27ம் தேதி இரவு 8 மணிக்கும் தொடங்குகிறது. இறுதிப்போட்டி ஜூன் 29ம் தேதி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்த நிலையில் ஜூன் 26 (இந்திய நேரப்படி ஜூன் 27) பிரையன் லாரா மைதானத்தில் காலை 6 மணிக்கு நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டிக்கு ரிசர்வ் டே கொடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது இரண்டாவது அரையிறுதி போட்டி நடைபெறும் இரவு 8 மணி என்கின்ற நேரத்தில் இதற்கான ரிசர்வ் டே அமைகிறது.
அதே சமயத்தில் ஜூன் 27ம் தேதி இரவு 8 மணிக்கு துவங்குகின்ற இரண்டாவது அரையிறுதி போட்டிக்கு ரிசர்வ் டே கொடுக்கப்படவில்லை. மாறாக கூடுதலாக 250 நிமிடங்கள் (அதாவது நான்கு மணி நேரம் பத்து நிமிடங்கள் கூடுதலாக) கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நேரத்திற்குள் போட்டி நடந்து முடிய வேண்டும். இல்லையென்றால் சூப்பர் 8 சுற்றில் முன்னிலை பெற்ற அணி எதுவோ அந்த அணி வென்றதாக அறிவிக்கப்படும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இறுதிப் போட்டி ஜூன் 29ஆம் தேதி நடைபெற இருப்பதால், ஜூன் 27ஆம் தேதி இரவு 8 மணிக்கு இரண்டாவது அரையிறுதி போட்டி துவங்குகின்ற காரணத்தினால், இறுதிப்போட்டி விளையாடுவதற்கு நடுவில் நேரம் கிடைக்காது. இதன் காரணமாகவே இரண்டாவது அரையிறுதி போட்டிக்கு மட்டும் ரிசர்வ் டே கொடுக்கப்படாமல், கூடுதலாக நான்கு மணி நேரம் பத்து நிமிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.