டி20 உலகக் கோப்பை: தென்ஆப்பிரிக்கா - இலங்கை இன்று பலப்பரீட்சை
|டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை அணி, தென்ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது.
நியூயார்க்,
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி ஸ்டேடியத்தில் இன்று (திங்கட்கிழமை) நடக்கும் ஒரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இலங்கை அணி, தென்ஆப்பிரிக்காவுடன் (டி பிரிவு) மல்லுக்கட்டுகிறது.
எய்டன் மார்க்ராம் தலைமையிலான தென்ஆப்பிரிக்கா 20 ஓவர் கிரிக்கெட்டில் கடைசியாக ஆடிய 11 ஆட்டங்களில் 9-ல் தோற்றுள்ளது. குயின்டான் டி காக், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், ரீஜா ஹென்ரிக்ஸ், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், ரபடா, ஷம்சி, மார்கோ யான்சென் என்று அந்த அணியில் தரமான வீரர்களுக்கு குறைவில்லை. ஆனால் ஒருங்கிணைந்து ஆடுவதில் தான் தடுமாறுகிறார்கள். அதை சரி செய்தால் எழுச்சி பெறலாம்.
சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா தலைமையில் களம் இறங்கும் இலங்கை அணியில் சாரித் அசலங்கா, சமரவீரா, குசல் மென்டிஸ், மேத்யூஸ், நிசாங்கா, காமிந்து மென்டிஸ், தீக்ஷனா, தனஞ்ஜெயா டி சில்வா உள்ளிட்டோர் நல்ல நிலையில் உள்ளனர்.
இரு அணிகளும் உலகக் கோப்பையை வெற்றியோடு தொடங்குவதில் தீவிர முனைப்பு காட்டுவதால் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. 20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 17 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 12-ல் தென்ஆப்பிரிக்காவும், 5-ல் இலங்கையும் வெற்றி கண்டுள்ளன. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
'சி' பிரிவில் ஆப்கானிஸ்தான்- உகாண்டா இடையிலான ஆட்டம் கயானாவில் உள்ளூர் நேரப்படி இரவு 8.30 மணிக்கு நடக்கிறது. ஆனால் இந்திய நேரப்படி இந்த ஆட்டத்தை மறுநாள் (செவ்வாய்கிழமை) காலை 6 மணிக்கு தான் பார்க்க முடியும்.