டி20 உலகக்கோப்பை: சூர்யகுமார் யாதவ் கேட்ச் சர்ச்சையை மீண்டும் எழுப்பிய ஷம்சி
|டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் சூர்யகுமார் யாதவ் பிடித்த கேட்ச் சர்ச்சையை கிளப்பியது.
கேப்டவுன்,
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பையை இந்தியா வென்றது. இதன் இறுதிப்போட்டியில் இந்திய அணி 7 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி 2-வது முறையாக கோப்பையை உச்சிமுகர்ந்தது.
இதில் இந்தியா நிர்ணயித்த 177 ரன் இலக்கை நோக்கி ஆடிய தென்ஆப்பிரிக்கா ஒரு கட்டத்தில் 4 விக்கெட்டுக்கு 151 ரன்களுடன் வலுவான நிலையில் இருந்தது. அப்போது அந்த அணிக்கு 24 பந்தில் 26 ரன் மட்டுமே தேவையாக இருந்தது.
ஆனால் ஹென்ரிச் கிளாசெனின் (5 சிக்சர், 2 பவுண்டரியுடன் 52 ரன்) விக்கெட்டை பாண்ட்யா கழற்றியது, 18-வது ஓவரில் பும்ரா ஒரு விக்கெட் எடுத்து 2 ரன் மட்டுமே வழங்கி மிரட்டியது, இறுதி ஓவரின் முதல் பந்தில் டேவிட் மில்லர் (21 ரன்) தூக்கியடித்த பந்தை எல்லைக்கோடு அருகே மிக லாகவமாக சூர்யகுமார் பிடித்தது இப்படி திக்...திக்...திக் திருப்பங்களுடன் ஆட்டமும் இந்தியா பக்கம் சாய்ந்தது. 20 ஓவர்களில் தென்ஆப்பிரிக்க அணி 8 விக்கெட்டுக்கு 169 ரன்னில் அடங்கி கோப்பையை கோட்டை விட்டது. சூர்யகுமார் யாதவ் பிடித்த அந்த கேட்ச் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
அதனால் சூர்யகுமார் பிடித்தது கேட்ச் அல்ல உலகக்கோப்பை என்று இந்திய ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் பாராட்டி வருகின்றனர். ஆனால் சில ரசிகர்கள் அது கேட்ச் கிடையாது என்றும்,அது சிக்சர் என்றும் சமூக வலைதளங்களில் குறை கூறி வந்தனர். எல்லைக்கோடு கொஞ்சம் நகர்த்தி வைக்கப்பட்டு இருந்ததாகவும் அந்த பவுண்டரி லைனில் அச்சு மைதானத்தில் இருந்ததாகவும் கூறினர். இதில் சூர்யகுமார் யாதவ் கால் வைத்ததால் நியாயமாக இது சிக்சர் என்று அறிவித்திருக்க வேண்டும் என்றும் அவர்கள் விமர்சித்தனர்.
இந்நிலையில் உலகக்கோப்பை முடிந்து 2 மாதங்கள் ஆகிய நிலையிலும், தென் ஆப்பிரிக்க வீரர் ஷம்சி இணையத்தில் வைரலாகும் ஒரு வீடியோவை வைத்து சூர்யகுமார் கேட்சை ஒப்பிட்டு மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார். அதில் ஒரு கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. அப்போது பேட்ஸ்மேன் அடித்த பந்தை சூர்யகுமார் போல ஒரு பீல்டர் பவுண்டரி எல்லையில் பிடிக்கிறார். இருப்பினும் அங்கே சரியான எல்லை இல்லாமல் குத்து மதிப்பான அளவு மட்டுமே உள்ளது.
அதனால் அந்த பீல்டர் கேட்ச்சா? இல்லையா? என்று தெரியாமல் அப்படியே நின்று கொண்டு அவுட் கேட்கிறார். அதன் பின் அம்பயர் உட்பட மற்ற அனைவரும் கயிற்றை எடுத்துச் சென்று அளவு வைத்து சோதித்து பார்க்கின்றனர். அப்போது அது சிக்ஸ் என்று தெரிய வருகிறது.
அதை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஷம்சி, "இது போல உலகக்கோப்பை பைனலில் அந்த கேட்ச்சை சோதித்திருந்தால் ஒருவேளை நாட் அவுட் வழங்கப்பட்டிருக்கும்" என்று ஜாலியாக பதிவிட்டார்.
அதைப் பார்த்த இந்திய ரசிகர்கள் 2 மாதங்களாகியும் நியாயமான அவுட் பற்றி இன்னும் ஏன் அழுகிறீர்கள்? என்று அவருக்கு பதிலடி கொடுத்தனர்.
அதற்கு ஷம்சி "இது கேலிக்கூத்தாக பதிவிடப்பட்டது என்று சிலருக்கு புரியவில்லை. இங்கு யாரும் அழவில்லை. 4 வயது குழந்தையை போல் உங்களுக்கு சொல்கிறேன். இது வெறும் நகைச்சுவை" என்று மீண்டும் பதிலளித்துள்ளார்.