டி20 உலக கோப்பை தொடர்: காயம் காரணமாக பிரிடோரியஸ் விலகல் - மார்கோ ஜான்சன் அணியில் சேர்ப்பு
|டி20 உலக கோப்பை தொடரில் இருந்து காயம் காரணமாக பிரிடோரியஸ் விலகி உள்ளார்.
கேப்டவுன்,
8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி-20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும்.
இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் உட்பட 8 அணிகள் பங்கேற்கும் முதல் சுற்றில் இருந்து 4 அணிகள் சூப்பர் 12 சுற்றில் விளையாடும். இந்நிலையில் டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் இடம் பிடித்திருந்த ஆல்-ரவுண்டர் டுவைன் பிரிடோரியஸ் எலும்பு முறிவு காரணமாக உலக கோப்பை தொடரில் இருந்து விலகி உள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின் போது இடது கட்டை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதனால் அவர் டி20 உலக கோப்பையில் இருந்து விலகுவதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது. இந்நிலையில் காயம் காரணமாக விலகிய பிரிடோரியஸ்க்கு மாற்று வீரரை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி டி20 உலக கோப்பை தொடருக்கு முதலில் ரிசர்வ் வீரராக அறிவித்த மார்கோ ஜான்சன் 15 பேர் கொண்ட அணியில் இடம் பிடித்துள்ளார். மார்க்கோ ஜான்சனுக்கு பதிலாக லிசாட் வில்லியம்ஸ் ரிசர்வ் பிளேயராக அணியில் இடம் பிடித்துள்ளார்.