டி20 உலகக்கோப்பை; ரசல் அதிரடி ஆட்டம்...வெஸ்ட் இண்டீஸ் 173 ரன்கள் குவிப்பு
|வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக ஜான்சன் சார்லஸ் 44 ரன்கள் எடுத்தார்.
கயானா,
20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கயானாவில் இன்று நடைபெற்று வரும் 18வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் - உகாண்டா அணிகள் ஆடி வருகின்றன.
இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரண்டன் கிங் மற்றும் ஜான்சன் சார்லஸ் ஆகியோர் களம் இறங்கினர். இதில் பிரண்டன் கிங் 13 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
இதையடுத்து பூரன் களம் இறங்கினார். சார்லஸ் - பூரன் இணை அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதில் பூரன் 22 ரன்னிலும், சார்லஸ் 44 ரன்னிலும் அடுத்து வந்த பவல் 23 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து ரூதர்போர்டு மற்றும் ரசல் ஜோடி சேர்ந்தனர்.
இதில் ரூதர்போர்டு 22 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து ரொமேரியோ ஷெப்பர்ட் களம் இறங்கினார். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக ஜான்சன் சார்லஸ் 44 ரன்கள் எடுத்தார்.
ரசல் 17 பந்துகளில் 30 ரன்கள் அடித்தார். உகாண்டா தரப்பில் பிரையன் மசாபா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உகாண்டா அணி ஆட உள்ளது.